"ராமமோகன ராவுக்கு மீண்டும் பதவியா?" வெகுண்டெழுந்த மு.க.ஸ்டாலின்

Asianet News Tamil  
Published : Mar 31, 2017, 04:32 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
"ராமமோகன ராவுக்கு மீண்டும் பதவியா?"  வெகுண்டெழுந்த மு.க.ஸ்டாலின்

சுருக்கம்

stalin condemns about ram mohan rao rejoining

பதவி நீக்கம் செய்யப்பட்ட ராம மோகன ராவுக்கு மீண்டும்  பணி நியமன ஆணை வழங்கப்பட்டதன் பின்னணி என்ன என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

 தலைமைச் செயலாளர் டூ அதிரடி சோதனை

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் செயலராக இருந்த ராமமோகனராவ் 2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். தொழிலதிபர் சேகர்ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு ஆகியோர்  கைது செய்யப்பட்டதன் நீட்சியாக கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவின் இல்லத்தில் துணை ராணுவப் படையினரின் உதவியோடு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 

பதவிநீக்கம்

அத்தோடு நி்ற்காமல் தமிழகத்தின் சுயமரியாதையாகக் கருதப்படும் தமிழக சட்டமன்றத்திலும் வருமான வரித்துறை அதிரடியாக புகுந்து அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியது.

இந்த ஆய்வில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து  அவரிடம் இருந்த தலைமை செயலாளர் பதவி பறிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். 

 அதிர்ச்சி பேட்டி

இதனைத் தொடர்ந்து போரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது "ஜெயலலிதா இருந்திருந்தால், தலைமைச் செயலகத்தில் இப்படியொரு ரெய்டு நடந்திருக்குமா? என் வீட்டில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை.

இன்னமும் நான் தலைமைச் செயலாளராக நீடிக்கிறேன். என்னை யாரும் பதவியை விட்டு நீக்க முடியாது. ரெய்டு நடவடிக்கை என்ற பெயரில் கடுமையான மிரட்டலுக்கு ஆளானேன்'" என பகிரங்கமாகப் பேட்டியளித்தார். 

ராமமோகனராவுக்கு மீண்டும் பதவி

இந்தச் சூழலில் ராமமோகனராவ் தொழில் முனைவோர் கழக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் கடந்த 3 மாதங்களாக வைக்கப்பட்டிருந்த ராமமோகனராவுக்கு மீண்டும் தமிழக அரசு பணி வழங்கியிருப்பது பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

ஸ்டாலின் கண்டனம்

ராமமோகனராவ் தொழில் முனைவோர் கழக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ராமமோகனராவுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

நேர்மையாளராக கருதப்படும் தமிழக  தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு இதில் உடன்பாடு உண்டா? ராமமோகனராவுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கப்பட்ட நெருக்கடியை குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாமக பொதுக்குழுவில் கண்ணீர் சிந்திய ராமதாஸ்... கதறிய தொண்டர்கள்!
தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - ராமதாஸ் முன்னிலையில் கொந்தளித்த அருள்