
ஆர்.கே.நகரில் வாக்காளருக்கு பணம் கொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம், பரிசு பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக வீடியோ ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன.
இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகருக்கு மேலும் 2 மத்திய பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்தது. துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹாவும் சென்னை வந்து தேர்தல் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்.
இந்தச்சூழலில் அங்குள்ள 38 வது வார்டில் அதிமுக அம்மா அணி சார்பில் பணம் விநியோகிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு விரைந்த அதிகாரிகள், வாக்காளர்களுக்கு பணத்தை அளித்துக் கொண்டிருந்த கருணாமூர்த்தி என்பவரை கைது செய்தனர்.