
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான முக.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் என்று அராஜகம் செய்து வந்த இலங்கை ராணுவம், இப்போது மீனவர்களை சுட்டுக் கொல்வதை மத்திய அரசு இனிமேலும் வேடிக்கை பார்க்கக் கூடாது”.
இலங்கை அரசை தூதரக ரீதியாக தொடர்பு கொண்டோ அல்லது இந்தியாவிற்கான இலங்கை தூதரை நேரில் அழைத்தோ இலங்கை அரசுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
இந்த கொடூரத் தாக்குதல் ராமநாதபுரம் பகுதி மீனவ கிராமங்களில் மட்டுமின்றி அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழக மீனவர்கள் மத்தியிலும் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிதியளித்து படுகாயமடைந்த மீனவர்களுக்கும் உயர்தர சிகிச்சை அளித்து காப்பாற்ற அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்….இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.