உதயநிதிக்கு கடிவாளம் போடாவிட்டால் கானல் நீராகும் ஸ்டாலினின் முதல்வர் கனவு... கைகோர்க்கும் கனிமொழி- அழகிரி..!

By Thiraviaraj RMFirst Published Nov 25, 2020, 3:07 PM IST
Highlights

உதயநிதி ஸ்டாலின், சாத்தான்குளத்திற்கு விரைந்து சென்று, அரசியல் செய்தார். இதை கனிமொழியால் ஏற்க முடியவில்லை.

உதயநிதியை தொடர்ச்சியாக முன்னிலைப்படுத்தி வரும் மு.க. ஸ்டாலின் நடவடிக்கையால், கனிமொழி கடும் கடுப்பில் உள்ளார். திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்காமல் அவர் புறக்கணித்துள்ளார். உதயநிதியின் போக்கால், தேர்தலுக்கு முன்பாகவே திமுகவில் விரிசல் உருவாகுமோ என்று, உடன்பிறப்புகள் கவலையடைந்துள்ளனர்.

 அமித்ஷாவின் வருகைக்கு பிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆனால், சட்டசபை தேர்தல் பணிகளை அதிமுக சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வருகிறது. ஆனால், எதிர்க்கட்சியான திமுக தரப்பிலோ எதிர்பார்த்த வேகம் இல்லை; கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அளவில் உட்கட்சி மோதல் என்றால், அதை சரிகட்டிவிடலாம்; ஆனால் உரசல் அதிகரித்து வருவது கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களான கனிமொழி – உதயநிதி இடையேதான் என்று, அறிவாலய வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

இது தொடர்பாக திமுக புள்ளிகள் சிலருடன் நமது ‘குற்றம் குற்றமே’ நிருபர் பேசியதில் கிடைத்த தகவல்கள் வருமாறு: கடந்த சில வாரங்களாக, நாளிதழ் செய்திகளில் தவறாமல் உதயநிதியின் பெயர் இடம் பெற்று வருகிறது. போராட்டம் நடத்துவதும், கைதாவதுமாக இருக்கிறார். இதெல்லாம், ஸ்டாலின் கொடுத்திருக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால்தான்.

 திமுகவில் உதயநிதிக்கு முக்கியத்துவம் தருவதையோ, அல்லது மாநில அளவில் அவர் முன்னிலைப்படுத்தப்படுவதையோ, கனிமொழி எந்த வகையிலும் எதிர்க்கவில்லை. ஆனால், தனது வளர்ச்சிக்கோ, செல்வாக்கிற்கோ முட்டுக்கட்டை போடும் வகையில் உதயநிதி குறுக்கே வந்து நிற்பதைத்தான் கனிமொழியால் ஜீரணிக்க முடியவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.

இதற்கு உதாரணமாக சில சம்பவங்களை, கனிமொழி ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சாத்தான்குளம் விவகாரத்தில் தூத்துக்குடி எம்.பி என்ற முறையிலும், கட்சி சார்பாகவும், கனிமொழி களத்தில் இறங்கி பணியாற்றினார்; ஆனால், சென்னையில் இருந்த உதயநிதி ஸ்டாலின், சாத்தான்குளத்திற்கு விரைந்து சென்று, அரசியல் செய்தார். இதை கனிமொழியால் ஏற்க முடியவில்லை.

 டெல்லியில் நடந்த ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்திலும், உதயநிதி மூக்கை நுழைத்தார். பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டபோது, டெல்லியில் இருந்த கனிமொழி, திமுக சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே சென்னையில் இருந்து டெல்லி பறந்த உதயநிதி, மாணவர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து, போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும் என்று உறுதி தந்தார்; தன்னை உதயநிதி சீண்டிப் பார்ப்பதாகவே, இதை கனிமொழி கருதினார்.

கலைஞரின் மகள், திமுகவில் முக்கிய புள்ளி, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரம் உள்ள நிலையில், தான் செல்லுமிடங்களுக்கு எல்லாம் உதயநிதி வந்து செல்ல வேண்டியதன் அவசியம் ஏன் ஏற்பட்டது? கனிமொழிக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக்கூடாது என்ற உதயநிதியின் நோக்கமே இதற்கு காரணம் என்கிறார்கள், கனிமொழியின் ஆதரவாளர்கள்.

உதயநிதியை திமுக இளைஞரணி செயலாளராக்கியதுமே, கனிமொழிக்கு எதிரான அஸ்திரத்தை கையில் எடுத்தார். `இளம் பெண்கள் பேரவை’ என்ற திட்டத்தின் மூலம் கனிமொழியை அடக்கி வைக்க நினைத்தார் என்பதும், அவர்களின் குற்றச்சாட்டாகும்.

இந்த திட்டத்துக்கு பின்னால், தன்னை கட்சியில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டும் திட்டம் இருப்பதாக கனிமொழி சந்தேகித்தார். உதயநிதியை வைத்து கனிமொழியைக் காலி செய்யவே, ஸ்டாலினும் இந்த யோசனைக்கு பச்சைக்கொடி காட்டியாதாக, கனிமொழி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதனால், கனிமொழியின் மொத்த கோபமும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது திரும்பி இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த மனக்கசப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் காரணமாக, சமீபத்திய கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதை கனிமொழி தவிர்த்து வருகிறார். அண்மையில், தி.மு.க-வின் சட்டசபைத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கூட்டம் கோவையில் நடந்தது. இதில் கனிமொழி எம்.பி பங்கேற்காதது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதேபோல், சில தினங்களுக்கு முன், சென்னையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்திலும் கனிமொழி கலந்து கொள்ளவில்லை.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை உதயநிதி ஆதரவாளர்கள் மறுக்கின்றனர். தேர்தல் நெருங்குவதால், களமிறங்கி உதயநிதி பம்பரமாக சுழல்கிறார். திமுகவின் வெற்றி ஒன்றே அவரது குறிக்கோள் என்கிறார்கள். கனிமொழி கட்சி எம்.பி.யாக இருக்கலாம்; அதற்காக உதயநிதியை மீறி கட்சிக்குள் ஆளுமை செலுத்த முற்படக்கூடாது என்று, ஸ்டாலின் குடும்பத்தில் சிலரே கருதுகிறார்களாம். மொத்தத்தில், இதுவரை பனிப்போர் போல் இருந்து வந்த உதயநிதி – கனிமொழி மனக்கசப்பு, தற்போது சற்று தூக்கலாகவே தெரிகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இது வெளிப்படையாக வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 ஏற்கனவே தென் மாவட்டங்களில் திமுக கொஞ்சம் பலவீனமாகவே உள்ளது. மதுரையில் அழகிரியின் குடைச்சல், திருநெல்வேலியில் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த சிவ பத்மநாபன் – முன்னாள் அமைச்சர் பூங்கோதைக்கும் இடையே பனிப்போர் என, திமுகவுக்கு பிரச்சனைகள் நீளுகின்றன. எனவே உதயநிதி ஸ்டாலினின் பாய்ச்சலுக்கு ஸ்டாலின் கடிவாளம் போடாவிட்டால், கனிமொழி வாயிலாக தென் மாவட்டங்களில் திமுக இழப்பை சந்திக்கலாம்; அது ஸ்டாலினின் முதலமைச்சர் கனவை, நனவாகாமல் போகச் செய்துவிடுமோ என்று, உடன் பிறப்புகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


 

click me!