
122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் மு.க.ஸ்டாலினால் எதுவும் செய்ய முடியாது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக இருக்கிறது தமிழக அரசியல் நிலவரம்.நொடிக்கு மாறும் அரசியல் ஸ்டண்ட், தலைவர்களின் அந்தர் பல்டி, இடைவிடாமல் அடித்து நொறுக்கும் பிரேக்கிங் நியூஸ்களால் தமிழக மக்கள் சோர்வின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கய்யா என்ற மீம்ஸ்களும் இணையத்தில் ரெக்கை கட்டி பறக்கின்றன.
ஆனாலும் தாங்கள் கொண்ட கொள்கையில் இதுவரை உறுதியாகவே பயணித்து வருகின்றனர் அதிமுகவின் இரு அணிளும். சசிகலாவை நீக்குங்க அப்பறம் பார்க்கலாம் என்று ஓ.பி.எஸ். டீம் தடதடக்க, அது குறித்து வெளிப்படையாக பதில் சொல்லாமல் தன் நிலையை சஸ்பெண்ஸாகவே வைத்து டென்சன் ஏற்றுகிறது எடப்பாடி அணி.
போதாத குறைக்கு எடப்பாடி அணியுடன் இணைய வேண்டாம் என்பதே தொண்டர்களின் கருத்து என்று செம்மலையும் ஸ்கோர் செய்ய, இது ஓ.பி.எஸ்.அணியின் கருத்தா அல்ல? செம்மலையின் தனிப்பட்ட விருப்பமா என்று இவ்விவகாரத்தை அசால்டாக டீல் செய்திருக்கிறார் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார்..
கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க மாட்டோம் என்று சத்தியம் செய்யாத குறையாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாலும், அவரை மீண்டும் மீண்டும் வம்புக்கு இழுத்து வருகின்றனர் எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள்.
எங்களிடம் 124 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது. அதனால் ஸ்டாலினால் எதுவும் செய்ய முடியாது என்று பஞ்ச் வசனம் பேசியிருக்கிறார் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அதிமுக எம்.எல்.ஏ.க்களை திமுகவுக்கு அழைத்து வர ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்று பொய்யான தகவல்களை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புவதாகவும் சீனிவாசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.