
முதல்வர், பொது செயலாளர் பதவி இல்லாமல் எடப்பாடி அணியுடன் இணைவதில் எந்த பயனும் இல்லை என்பதில் பன்னீர் அணி மிகவும் உறுதியாக இருக்கிறது.
பன்னீர் அணியின் முக்கிய தலைவர்கள் அனைவரும், நேற்று அவரது வீட்டில் கூடி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.
அப்போது அணிகள் இணைப்பு என்பது சசிகலா குடும்பம் நடத்தும் நாடகம். அவர்களுக்கு தேவை இரட்டை இலை சின்னம். அதற்காகவே, அணிகள் இணைப்பு என்று பேசி வருகின்றனர் என்றார் செம்மலை.
நாம் அங்கு இணைந்து இரட்டை இலை சின்னத்தை பெற்றுவிட்டால், ஏதாவது ஒரு வழியில், சசிகலா குடும்பம் உள்ளே புகுந்து விடும்.
சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்ததாக அவர்கள் கூறினாலும், சேலத்தில் முதல்வர் எடப்பாடி கலந்து கொண்ட பல கூட்டங்களில், சசிகலாவின் படங்கள் இருந்துள்ளது.
அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை பெரும்பாலும் நமது அணியிலேயே உள்ளனர். அவர்கள் யாருக்கும், எடப்பாடி அணியோடு நாம் இணைவதில் விருப்பம் இல்லை.
தனியாகவே இயங்கலாம் என்றே கூறுகின்றனர். சேலம் மாவட்ட தொண்டர்களும் அதை கூறுவதால், அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று செம்மலை கூறினார்.
அத்துடன் முதல்வர் பதவியும், பொது செயலாளர் பதவியும் இல்லாமல், அந்த அணியுடன் இணைவதில் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.
பன்னீர் அணியில் உள்ள அனைவரது மன நிலையம் அதுவாகவே இருந்ததால், அனைவரும் செம்மலை கூறியதை ஆமோதித்துள்ளனர்.
கடைசியாக பேசிய பன்னீர், அந்த அணியில் இருந்து என்னிடம் சிலர் பேசுவதாக கூறி உள்ளனர். அவர்களிடம் பேசி விட்டு சொல்கிறேன்.
எந்த முடிவாக இருந்தாலும், நான் உங்கள் எண்ணப்படியே, கலந்து பேசிய பின்னரே எடுப்பேன் என்று கூறி கூட்டத்தை முடித்துள்ளார்.
இதை எல்லாம் பார்க்கும்போது, முதல்வர் மற்றும் பொது செயலாளர் பதவியை பன்னீர் தரப்புக்கு வழங்க எடப்பாடி அணி தயாராக இல்லை. பன்னீர் தரப்பும், அந்த பொறுப்புக்களை விட்டு கொடுப்பதாக இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.
எனவே, அணிகள் இணைப்பு என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.