
இரட்டை இலையை சசிகலாவுக்கே தேர்தல் ஆணையம் அளித்திருக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன்சுவாமி தெரிவித்துள்ளார்.
சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்திய போதும் சசிகலாவுக்கே தனது ஆதரவு என்று ஓப்பனாகவே கூறி அனைவருக்கும் சர்ப்ரைஸ் அளித்தவர் பா.ஜ.க.மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி. இந்நிலையில் இரட்டை இலை லஞ்ச வழக்கு குறித்து சுப்ரமணியன்சுவாமி மீண்டும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
டெல்லியில் இது குறித்துப் பேசிய அவர், " இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு டிடிவி தினகரன் உண்மையாகவே லஞ்சம் அளித்திருந்தால் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஆனால் அவர் ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்தால் அதற்குரிய சட்டவிதிகளின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து இவ்விவகாரத்தை தேர்தல் ஆணையத்துடன் முடிச்சு போடக் கூடாது"
"இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி.தினகரன் லஞ்சம் அளிக்க முயன்றார் என்ற வழக்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. லஞ்சம் அளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் சசிகலா மற்றும் டிடிவிக்கு எதிராக தேர்தல் ஆணையம் எப்படி நடவடிக்கை எடுத்திருக்க முடியும். விசாரணைக்குப் பின்னர் இரட்டை இலையை யாருக்கும் அளிக்காமல் தேர்தல் ஆணையம் எதற்காக முடக்க வேண்டும். ஒருவேளை இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு தேர்தல் ஆணையம் அளித்திருந்தால், லஞ்சம் அளிக்கப்பட்ட புகாரை ஏற்றுக் கொள்ளளாம்."
"என்னதான் இருந்தாலும் இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தவறான முடிவு எடுத்துள்ளது என்பதே கருத்து. பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றிருக்கும் சசிகலா அணிக்கே இரட்டை இலை சின்னம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரே ஒரு எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோருவது விந்தையாக இருக்கிறது" இவ்வாறாக முடிகிறது சுப்ரமணியன்சுவாமியின் பேட்டி.