
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் மீது பெரா வழக்கு இருப்பதால் அது பெரா மாபியா அணி என்றும், மணல் கடத்துபவர்களுடன் தொடர்பு இருப்பதால் ஓபிஎஸ் மணல் மாபியா அணி என்றும் பொது மக்கள் அழைப்பதாக ஸ்டாலினி தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான மருதுகணேஷுக்கு ஆதரவாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சென்னை ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் வணிகர்கள் மத்தியிலும் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அதிமுகவின் இரண்டு அணிகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரையில் இரண்டு அணிகளாக அதிமுக நிற்கிறது. அந்த இரண்டு அணியாக நிற்கக்கூடியவர்களில், ஓர் அணியில் நிற்கக்கூடியவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், பெரா வழக்கு இருப்பதால், 'பெரா மாஃபியா அணி', என்று சொல்லக்கூடிய தினகரன் அணியாக நிற்கிறது. இன்னொரு அணி 'மணல் மாஃபியா அணி'. சேகர்ரெட்டி என்பவருடன் தொடர்புடைய மணல் மாஃபியா அணி, ஓ.பி.எஸ் தலைமையில் இருக்கக்கூடிய அணி என்று விமர்சனம் செய்தார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்க திமுக முயற்சிகளை முன்னெடுக்கும் என வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் உறுதி அளித்தார்.