கூட்டணி வச்சுக்கலைன்னா இடைத்தேர்தல் வச்சிடுவோம்… அதிமுகவை மிரட்டுகிறதா பாஜக… ஸ்டாலின் கிளப்பும் பகீர் புகார் !!

By Selvanayagam PFirst Published Feb 11, 2019, 8:53 AM IST
Highlights

தமிழகத்தில் 21 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்திவிடுவோம் என மிரட்டியே அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட காலியிடம், கருணாநிதி, ஏ.கே.போஸ் போன்றோர் மறைவால் ஏற்பட்ட காலியிடம், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதால் ஏற்பட்ட காலியிடம் என மொத்தம் 21 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டும்.

இதில் 18 தொகுதிகளுக்கு கிட்டத்தட்ட 15 மாதங்களாக எம்எல்ஏக்கள் இல்லாமல் இருக்கினறனர். இதில் ஆளும் அதிமுக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்கு வாய்பில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எனவே ஆளும் அதிமுக, மத்திய அரசு உதவியுடன்  இடைத் தேர்தலை தொடர்ந்து தள்ளிப் போட்டு வருவதாக பரவலாக ஒரு கருத்து இருந்து வருகிறது. இந்நிலையில் பாஜக, ஆளும் அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ள முயற்சி எடுத்து வருகிறது, மேலும் வலுக்கட்டாயமாக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், : பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். 

ஆனால் 15 மாதங்களாகியும் நடத்தவில்லை. முதலமைச்சரை மாற்ற வேண்டும்' என கவர்னரிடம் மனு கொடுத்ததால் எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டது. முதல்வருக்கு எதிராக ஓட்டளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரின் பதவி மட்டும் பறிக்கப்படவில்லை என தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் 11 பேரின் பதவி பறிக்கப்பட்டதாகத் தான் தீர்ப்பு வரும் என்றுட் ஸ்டாலின் கூறினார்.


தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள எந்தக் கட்சியும் விரும்பவில்லை. ஆனால் 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தி விடுவோம் என்று மிரட்டியே அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். .

ஆனால்  இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும்  21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கா விட்டால் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் ஸ்டாலின் எச்சரித்தார்.

click me!