
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65வது பிறந்தநாள் இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு இன்று காலை சென்ற அவர், அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று, அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதைதொடர்ந்து கோபாலபுரம் சென்ற அவர், திமுக தலைவர் கருணாநிதி, தாய் தயாளு அம்மாள் ஆகியோரிடம் ஆசி பெற்றார். அங்கிருந்து, கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு சென்று, கலைஞர் அரங்கத்தில் திரண்டு இருந்ததொண்டர்களிடம் வாழ்த்து பெற்று வருகிறார்.
கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் கொண்டாடும் முதல் நிகழ்ச்சியாகவும், தனது பிறந்தநாளாகவும் கொண்டாடுவதால், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கானோர் சென்றுள்ளனர்.
தனக்கு சால்வை அணிவிக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக புத்தகங்கள் அளித்தால், மேலும் தனது அறிவை விசாலப்படுத்தி கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் தொண்டர்களிடம், அவர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.