
இரட்டை இலை சின்னத்தை எத்தனையோ முறை தோற்கடித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறோம். இரட்டை இலையை அதிமுக பெற்றிருந்தாலும், ஆர்.கே.நகரில் திமுகவின் வெற்றி உறுதி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஓராண்டாக காலியாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை அடுத்து தமிழகத்தின் பிரதான கட்சிகள் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசித்து வருகின்றன. கடந்த முறை அதிமுக அம்மா அணி சார்பில் தினகரன் போட்டியிட்டார். இம்முறை, இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதால், அங்கீகரிக்கப்பட்ட அதிமுக என்பது ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் இயங்குவதுதான் என்றாகிவிட்டது. அதனால், அதிமுகவில் அணிகள் கிடையாது. எனினும் தினகரன் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த முறை போட்டியிட்ட மருதுகணேஷ் இந்த முறையும் ஆர்.கே.நகர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதாவை வீழ்த்தி ஏற்கனவே ஆட்சியை பிடித்துள்ளோம். எனவே இரட்டை இலை என்பது வெற்றி தோல்வியை தீர்மானிக்காது. அதனால் இரட்டை இலையை திமுக ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஜனநாயக முறைப்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுகவின் வேட்பாளரை ஆதரிக்க தோழமை கட்சிகளின் ஆதரவு கோரப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.