ஸ்டாலின் – அழகிரி திடீர் சந்திப்பு !!

By Selvanayagam PFirst Published Nov 19, 2019, 7:46 AM IST
Highlights

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன்  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். அப்போது உள்ளாட்சி தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், கூட்டணி கட்சி தலைவர்களும் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, எஸ்.சி.பிரிவு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மு.க.ஸ்டாலினும், கே.எஸ்.அழகிரியும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி , , ‘உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சி அதிகார அத்துமீறலில் ஈடுபட்டால், அதனை முறியடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். வார்டு பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன், அதுகுறித்து பேசுவோம்’ என்றார்.
 

click me!