
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டங்களுக்கு தொழிற்சங்கங்களே காரணம் என துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பேசியதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பள்ளி-கல்லூரி செல்வதற்கும், பணியிடங்களுக்கு செல்வதற்கும், மாணவர்களும், பொதுமக்களும் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் நீதிமன்றம், போக்குவரத்து ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்பும்படி எச்சரித்தபோதும், போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிக்கு திரும்ப முடியாது என அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. இதில் கேள்விபதில் நேரங்களில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அதற்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அதன்படி போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை குறித்து சட்டப்பேரவையில் டி.டி.வி தினகரன் பேசினார். முதல்வர் தலையிட்டு போக்குவரத்து ஊழியர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறினார்.
இதைதொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எங்களது தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசத் தயார் என திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார். ஆனால் முதலமைச்சர் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டங்களுக்கு தொழிற்சங்கங்களே காரணம் என தெரிவித்தார்.
இதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கிறார் என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
ஓ.பி.எஸ். பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க திமுகவினர் பேரவையில் வலியுறுத்தியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் பற்றி சட்டப்பேரவையில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.