
தற்காலிக பேருந்து டிரைவர்களால் சிறு சிறு சம்பவங்கள் நடந்த நிலையில், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. அரசு பேருந்துவில் பீதியுடனே பயணம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பள்ளி-கல்லூரி செல்வதற்கும், பணியிடங்களுக்கு செல்வதற்கும், மாணவர்களும், பொதுமக்களும் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் நீதிமன்றம், போக்குவரத்து ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்பும்படி எச்சரித்தபோதும், போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிக்கு திரும்ப முடியாது என அதிரடியாக அறிவித்தனர். இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
தற்காலிக பேருந்து ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றன. தற்காலிக பேருந்து ஓட்டுநரால் ஆங்காங்கே விபத்துகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் பேருந்தில் அச்சத்துடனே பயணம் செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த டேனியல் என்பவரும், அரசு பேருந்து ஓட்ட விண்ணப்பம் செய்திருந்தார். இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தவர். பணிக்கு தேர்வான டேமனியல், நேற்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருநகருக்கு பேருந்தை ஓட்டிச் சென்றார்.
இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து திருநகர் அருகே ஒரு திருப்பத்தில் சென்றபோது, சாலையில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. மோதிய வேகத்தில் மின்கம்பம் வளைந்தது.
மின் கம்பத்தில் மோதி நின்ற பேருந்துவில் இருந்து பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர். இதில் மின்கம்பம் வளைந்தது. மின் கம்பிகள் அறுந்து விழாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மின் கம்பத்தை சரிசெய்ய இழப்பீடு தர வேண்டுமென மின் வாரியத்தினர் போக்குவரத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து ஒன்று, வேலூர் மாவட்டம், திருப்பத்தூருக்கு செல்லவேண்டிய நிலையில், மதுரையில் உள்ள திருப்பத்தூருக்கு சென்றது. தூக்கத்தில் இருந்து விழித்த பயணிகள், பதறினர். தாங்கள் மீண்டும் வேலூர்-திருப்பத்தூருக்கு செல்ல பயண கட்டணம் வேண்டும் என்று நடத்துனரிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தை, தற்காலிக ஓட்டுநரான செந்தில் இயக்கினார். மதுரை உத்தங்குடி அருகே தனியார் கல்லூரி பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது கல்லூரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. கல்லூரி பேருந்தின் பின்புற கண்ணாடியும், அரசு பேருந்தின் முன்புற கண்ணாடியும் உடைந்தது. இந்த விபத்தில் மாணவர்கள், பொதுமக்கள் என 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
செங்கல்பட்டு அருகே தற்காலிய பேருந்து ஓட்டுநர் இயக்கிய பேருந்து மோதி 5 பேர் காயமடைந்தனர். 2 கார்கள் சேதமடைந்தது. சென்னை, சாந்தோம் அருகே தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து பைக் மீது மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
தற்காலிக பேருந்து ஓட்டுநர்களால் சிறு சிறு சம்பவங்கள் நடந்த நிலையில், உயிரிழப்புகளும், ஏற்பட்டு வருகிறது. இதனால், பேருந்துவில் பயணம் செய்ய அச்சத்துடனே பயணம் செய்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், தமிழக அரசு அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.