
நான் நேரடியாக தொழிற்சங்கங்களுடன் பேசவில்லை என்பதற்காக வேலைநிறுத்த விவகாரத்தில் நான் கவனம் செலுத்தவில்லை என்று அர்த்தமாகாது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தை 2.57 மடங்கு உயர்த்த வேண்டும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 6வது நாளாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியாக இருக்கின்றன. 6வது நாளாக இன்றும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இதனால் பொதுமக்கல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பொங்கல் நெருங்கிவிட்டதால், சொந்த ஊருக்கு செல்லும் மக்கள், அதற்குள்ளாக பேருந்துகள் இயங்குமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில், சட்டமன்றத்தில் இதுதொடர்பாக கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஊழியர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார். இதுவரை முதல்வர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன்? என கேள்வியும் எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, முதல்வர் என்ற முறையில் தொழிலாளர்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் நான் மதிக்கிறேன். நான் நேரடியாக பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்பதற்காக வேலைநிறுத்த விவகாரத்தில் நான் கவனம் செலுத்தவில்லை என்று அர்த்தமில்லை. என்னுடைய அறிவுரையின் பேரில்தான் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தொமுச-வுடன் பேசி பணிக்கு திரும்ப வலியுறுத்த வேண்டும். அதேபோல், மற்ற கட்சி தலைவர்களும் அவர்களின் தொழிற்சங்கங்களுடன் பேசி பணிக்கு திரும்ப வலியுறுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.