இனிமேலாவது திருந்துங்கப்பா !! பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ் !!

By Selvanayagam PFirst Published Nov 26, 2019, 9:10 PM IST
Highlights

மகாராஷ்ட்ரா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து பாஜக அரசு இனிமேலாவது திருந்தி நடந்து கொள்ள வேண்டும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக  பதவியேற்றார்.

இதை எதிர்த்து  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே முதலமைச்சர்  பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அரசியல் அமைப்பு தினமான இன்று உச்சநீதிமன்றம் சிறப்புமிக்க தீர்பை வழங்கியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பு தினத்தில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது.

ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்

click me!