
ஆர்.கே.நகரில் தோற்றாலும் தோற்றது, தி.மு.க.வை வெச்சு செய்கிறார்கள் விமர்சகர்களும், சக அரசியல்வாதிகளும். அதிலும் இணையதளத்தில் இப்படித்தான் என்றில்லை, கசாமுசாவென கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள் தி.மு.க.வை.
இணையதளத்தில் தி.மு.க.வின் தோல்விக்கான காரணங்களாக அடுக்கப்பட்டவைகளில் சில...
* பிரச்சாரத்துக்கு போகாமலே ஜெயிக்கலாமுன்னு நினைச்ச தி.மு.க.வுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்!
* திருமங்கலம் ஃபார்மூலான்னு சொல்லி நாட்டை நாசமாக்கிய மு.க. டீமுக்கு இந்த அடி பத்தாது.
* அசால்டா தேர்தலை நினைச்சதோட விளைவு, டெப்பாசிட்டும் டண்டணக்காவாயிடுச்சு.
* இனி தன்னை விட்டால் ஆளேயில்லை என்று ஸ்டாலின் பகல் கனவில் மிதந்தார். ஆனால் மக்களோ உங்களை நாங்க நினைக்கவேயில்லைன்னு காட்டிட்டாங்க.
...இப்படி ரகம் ரகமாய் வரிசை கட்டுகின்றன.
இதற்கெல்லாம் தமிழகமெங்கும் இருக்கின்ற தி.மு.க.வினர் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் வழியே பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ’டெப்பாசிட் பணம் கூட கிடைக்காம போச்சே!’ என்று தொடர்ந்து வாட்ஸ் அப் குரூப்புகளில் வந்த நக்கலுக்கு பதிலடியாக ‘இந்த டிப்பாசிட் பணம் எங்க தளபதியோட ஒரு நாள் பெட்ரோல் செலவுக்கு கூட பத்தாதுடா.’ என்று தி.மு.க. நிர்வாகி ஒருவர் பதிவிட்டு கடுப்பை தீர்த்துக் கொண்டார்.
இதை அந்த குரூப்பில் உள்ளவர்கள் தாறுமாறாக விமர்சித்து பேசியிருக்கின்றனர். ஆனாலும் அதற்கும் மசியாத அந்த நபர் தொடர்ந்து அதை வலியுறுத்தியதோடு, இனி எவனாவது டெப்பாசிட் பணத்தை பத்தி நக்கல் பேசினால், கேவலமாய் திட்டுவேன் என்றும் போட்டுத் தாக்கினாராம்.
இந்த தகவல் அறிவாலயம் வரை போக, ‘யார் அந்த நிர்வாகின்னு கண்டுபிடியுங்க. இப்படியெல்லாம் திமிரா பதில் சொல்றது ரொம்ப தப்பு. நம்மை நாமே அசிங்கப்படுத்திகிற வேலை இது.’ என்று அறிவுரையோடு, ஆர்டரும் பறந்திருக்கிறதாம்.