
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் கட்சி வேட்பாளரை தவிர அனைவரும் தங்களது டெப்பாசிட்டை இழந்துள்ளனர். இதில் கொடுமை என்னென்ன பாஜக வேட்பாளர் கரு. நாகராஜனை (1,417) விட நோட்டா 956 வாக்குகள் அதிகமாக பெற்று 2,373 வாக்குகள் பெற்றுள்ளது தமிழக பாஜக தலைவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது இந்த இடைத்தேர்தல் ரிசல்ட்.
இதனையடுத்து இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது; ஆர்.கே.நகரில் நடந்தது தேர்தலே அல்ல. உண்மையான சமதளத்தில் தேர்தல் நடைபெற்றால்தான் அதில் வாங்கிய வாக்குகளைக் குறியீடாகப் பார்க்க முடியும். ஆர்.கே.நகரில் பாஜக தொடர்ந்து களத்தில் போராடியது. தினகரனின் வெற்றி என்பது வாங்கப்பட்ட வெற்றிதான். ஆர்.கே.நகர் வாக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை. சிறையில் உள்ளவர்கள் புனிதத்துவம் பெற்றது போன்று வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த வெற்றி தமிழகம் முழுவதும் பிரதிபலிக்காது. எங்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கும். ஆனால் வாக்காளர்கள் சிந்திப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தத் தேர்தலை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. பாஜக தமிழகத்தில் வலுப்பெறுவதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழிசையின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தினகரன் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியிருப்பதாவது, ''நோட்டாவைவிட பாஜக குறைந்த வாக்குகள்தான் பெற்றது. அதனால் டிடிவி அவர்கள் நோட்டாவுக்கு பணம் கொடுத்துள்ளார் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? . நாங்கள் பணம் கொடுக்க தேவை இல்லை . அதற்கான அவசியமும் இல்லை . டிடிவி தினகரன் வரவேண்டும் என்று மக்கள் நினைத்ததால் அவர் வெற்றியடைந்துள்ளார்'' என்றார்.