
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கி வென்ற தினகரனை அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா இன்று மாலை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு அமோக வாக்குகள் பெற்று வென்றுள்ளார் தினகரன். ஆளும்கட்சி அதிமுக படுதோல்வியடைந்தது, பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான திமுக டெபாசிட் இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தினகரனின் வெற்றியைத் தொடர்ந்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். இவர் அதிமுக அணி பிளவுபட்டு இரு அணிகளான போது எந்த அணியிலும் இணையாமல் இருந்துவந்தார்.
இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள தினகரன் வீட்டில் இச்சந்திப்பு நடைபெற்றது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா குடும்பத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர் சசிகலா புஷ்பா. சசிகலா புஷ்பாவின் தினகரனுடனான இந்த திடீர் சந்திப்பு அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினகரனை சந்தித்த பின் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணன் தினகரன் வெற்றி இமாலய வெற்றி பெற்றுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற அண்ணன் தினகரனுக்கு வாழ்த்துகள், ஆளும் கட்சியை எதிர்த்து தினகரன் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். தினகரன் தலைமையில் செயல்பட தயாராக இருக்கிறேன். நான் மட்டுமல்ல என்னைப்போல பலரும் தினகரனின் தலைமையை ஏற்க தயாராக இருக்கிறார்கள்.
மேலும் பேசிய அவர் முதல்வர், துணை முதல்வர் அதிகாரத்தை பயன்படுத்தினார்கள், அதிகாரத்தை மீறி மக்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என பார்க்க வேண்டும், ஒரு தலைவருக்கு உள்ள பண்பு விட்டு விடுக்கக் கூடாது என்பது தினகரனிடம் இருக்கிறது இவ்வாறு கூறியுள்ளார்.