
அணிலை தான் கேட்கணும் என தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்த முன்னால் அமைச்சர் சி.வி சண்முகம் திமுகவை கலாய்த்து பேசியுள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு நக்கலாக பதிலளித்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது முதல் பாஜக- அதிமுக அதன் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிமுக எதிர்க்கட்சி என்றாலும் தாங்களே உண்மையான எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கும் வகையில் பாஜக திமுகவை விமர்சிப்பதில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. மறுபுறம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுகவை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜெயக்குமாருக்கு அடுத்தபடியாக சிவி சண்முகம் இருந்து வருகிறார். திமுக எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை கட்டமாக விமர்சிக்கும் நபராகவே சிவி சண்முகம் உள்ளார்.
இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சி தேர்தலில் விழுப்புரம் மாவட்ட செயலாளராக மீண்டும் சி.வி சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக சதி செய்து வருகிறது, 69 சதவீத இட ஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடாது என்றால், சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குலசேகரன் ஆணையம் கடந்த ஒன்றரை ஆண்டுகள் செயல்பட்டு இருந்தால் நமக்கு அதற்கான புள்ளிவிபரங்கள் கிடைத்திருக்கும். இட ஒதுக்கீடு தொடர்பான இறுதி விசாரணை வரும் போது அந்த தகவலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இட ஒதுக்கீடு தேவை என வாதாடுவதற்கு அது வாய்ப்பாக இருந்திருக்கும்.
ஆனால் சமூக நீதியை வாயலவில் மட்டும் திமுக பேசி வருகிறது. வாயால் பேசிக்கொண்டு இருந்தால் மட்டும் சமூக நீதி கிடைத்து விடாது என்றார். மாவட்ட அளவில் இப்பொழுது பொறுப்பு கிடைத்துள்ள நிலையில் மாநில பொறுப்புகளுக்கு முயற்சி செய்வீர்களா என செய்தியாக எழுப்பிய கேள்விக்கே, இருக்கிற பொறுப்புக்கு வேலை இல்லை இதில் மாநில பொறுப்பா என அவர் நகைச்சுவையாக பதிலளித்தார். அப்போது தமிழகத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டு தொடர்பாக அவரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர், மின்வெட்டு ஏற்படுவதற்கு அணிலை தான் கேட்கணும் என்ற அவர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டாவது மாதத்திலேயே மின்வெட்டு தொடங்கிவிட்டது. இந்தியாவிலேயே தன்னைத்தானே நெம்பர் ஒன் முதலமைச்சர் எனக் கூறிக்கொள்ளும் ஸ்டாலின் ஆளுமையின் கீழு மின்வெட்டு வருவதற்கு காரணம் என்ன என்றார்.
இது முற்றிலும் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மின்வெட்டு, இதில் ஊழல் செய்ய திமுகவினர் முயற்சிக்கின்றனர். மின் வெட்டு என்ற பெயரில் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். அப்படியும் இல்லை என்றால் இதை கையாலாகாத அரசு என்றுதான் நாம் கூற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
அதாவது, திமுக ஆட்சியைக் கைப்பற்றிய ஒரு சில மாதங்களிலேயே மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் அதற்கு அத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அதிமுக ஆட்சியின்போது மின் கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படவில்லை, அதன் விளைவாகவே மின்வெட்டு ஏற்படுகிறது என்றும், ஒரு சில இடங்களில் அணில்கள் கடிப்பதால் ஆங்காங்கே மின் வயர்களில் சேதம் ஏற்பட்டு அதன் மூலம் மின் வெட்டி நிகழ்கிறது என விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில்,அது தொடர்பாக கேள்விக்கு " அணிலை தான் கேட்கணும் என அமைச்சர் செந்தில் பாலாஜியை கிண்டல் செய்யும் வகையில் சி.வி சண்முகம் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.