
ஆத்மா என்பதன் தமிழ்வார்த்தைதான் ஆன்மா… ஆன்மா…ஆன்மீகம் என்றாலே பித்தலாட்டம்தான் … அதை வைத்துக்கொண்டு நடிகர் ரஜினி எப்படி அரசியல் நடத்துவார் ? என திராவிடர் கழக தலைவர் வீரமணி கேள்வி எழுப்பினார்.
திருச்சி பெரியார் மணியம்மை பள்ளியில் உலக நாத்திகர் மாநாடு நேற்று மன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முருகன் பக்தர்கள் குடும்பத்தில்தான் நான் பிறந்தேன். 12வயதில் எனக்குள் கடவுள் நம்பிக்கை போய்விட்டது என்றார்.
அப்போதே நான் பெரியாரின் பேச்சுகளை கேட்டேன், அந்த பேச்சுகள் குறித்து எனது தந்தையிடன் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. அப்போதே எனக்குள் நாத்திக கொள்கையை விதைத்து விட்டார்கள் என குறிப்பிட்டார்.
திகார் ஜெயிலுக்கு போனபோது நாத்திக கொள்கை பல மடங்கு அதிகமானது. நாத்திக கொள்கைகள் தான் நம் நாட்டை வருங்காலங்களில் காப்பாற்றும் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய திராவிர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி , நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு மட்டுமல்ல. மனித குலத்தின் உரிமைகளை சட்ட ரீதியாக மீட்டெடுக்க இருக்கும் ஒரே நம்பிக்கை என்று குறிப்பிட்டார்.
சமூகத்தில் நிலவும் தீண்டாமைகளுக்கும், சாதிய கொடுமைகளுக்கும் எதிரானது. நாத்திகம் என்பது அனைத்து செயல்களையும் அறிவியல் ரீதியாக அணுகக்கூடியது. ஏன், எதற்கு என்ற கேள்வி மூலம் உண்மையை தெரியப்படுத்துதான் நாத்திகம் என்றார்.
இந்தியாவில் நிலவிய சாதிய தீண்டாமைகளை வேரோடு அகற்ற பெரும் முயற்சி செய்தவர் பெரியார். அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆத்மா என்பது பித்தலாட்டம். அதனுடைய தமிழ் வார்த்தை தான் ஆன்மா. இல்லாத ஒன்றை நடத்துகிறோம் என்பது எவ்வளவு புரட்டு என்றார். பொய்யான ஒன்றை வைத்து நடிகர் ரஜினிகாந்த் எப்படி அரசியல் நடத்துவார் எனவும் வீரமணி கேள்வி எழுப்பினார்.