
வி.ஐ.பி. கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஏற்கனவே சிவப்பு விளக்குகளை அகற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர், லெப்டினென்ட் கவர்னர் ஆகியோர்களின் கார்களுக்கும் நம்பர் பிளேட் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், “ வி.ஐ.பி.க்கள், ஜனாதிபதி, ஆளுநர் உள்ளிட்டவர்களின் கார்களில் நம்பர் பிளேட்டுக்கு பதிலாக நாட்டின் தேசிய சின்னம் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் எளிதாக தாக்குதல் நடத்துவதற்கு அடையாளம் காணப்பட்டுவிடும். மேலும் மோட்டார் வாகனச்சட்டப்படி ஒருவாகனம் பதிவு எண் இல்லாமல் சாலையில் ஓடுவது சட்டப்படி குற்றமாகும்’’ எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு மீது உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர் நீதிமன்றம், “ அரசு உயர் பதவிகளில் உள்ளவர்கள் பதிவு எண் இல்லாத வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா?’’ என்று கேள்வி எழுப்பியது. மேலும், மத்தியஅரசு பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியது.
இதனால், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆளுநர், துணை நிலை ஆளுநர் ஆகியோர் பயன்படுத்தும் கார்களில் இனி தேசிய சின்னத்துக்கு பதிலாக, பதிவு எண்களை அறிமுகம் செய்யும் அறிவிப்பை விரைவில் மத்திய அரசு வெளியிடும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் ஆகியோரைத் தவிர்த்து மற்றவர்கள் கார்களில் சிவப்பு விளக்குகள் பயன்படுத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.