"ஒரு சிங்கமும் சில காளைகளும்"- மேயப்போவது யாரு? மிரளப்போவது யாரு?

First Published Sep 1, 2017, 2:14 PM IST
Highlights
Special Article About Stalin Vaiko and Thirumavalavan


அந்த கதையை நீங்கள், நான் என எல்லோரும் வாழ்வில் கடந்துதான் வந்திருக்கிறோம். ஏன் ஸ்டாலினும், வைகோவும், திருமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 

அது...ஒரே மேய்ச்சல் வெளியில் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் மேய்ந்து கொண்டிருந்த காளைகளை சிங்கம் எளிதாக வேட்டையாடியது. சிதறிக்கிடப்பதால் ஏற்படும் தீங்கை புரிந்து கொண்டு அந்த காளைகள் ஒன்று சேர்ந்து நின்றபோது சிங்கம் பதறித் தெறித்து ஓடியது. 
இந்த கதையும், அதன் கருவும் ஆரம்பபாட சாலை மாணவர்களுக்கு மட்டுமில்லை. தமிழக அரசியலில் இன்று கனன்று கொண்டிருக்கும் அத்தனை தலைவர்களுக்கும் அவசியமானதுதான் என்பதை அ.தி.மு.க.வின் வீழ்ச்சியும், சரணாகதி நிலையும் சப்தம் போட்டு சொல்லிக் கொண்டிருக்கின்றன. 

ஆகஸ்டு 11_ம் தேதியன்று ஆரவாரமாக துவங்கிய முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் கடும் மழையால் கைவிடப்பட்டது. ’எங்களின் நிகழ்வு தடைபட்டாலும் கூட சென்னையின் தாகம் தீர்க்க வந்த மழைக்கு நன்றி. இன்னொரு நாளில் இந்த பொதுக்கூட்டம் நிச்சயம் நிகழும்.’ என்று சொல்லிவிட்டு கலைந்தனர். சகுனங்களில் நம்பிக்கையில்லை என்று சொல்லிக் கொள்ளும் பெரியாரின் பிள்ளைகளான தி.மு.க.வினரில் சிலர் மட்டும் உள்மனதில் ‘இந்த தடை ஏதோ ஒரு புதிருக்கான விடையை அவிழ்ப்பது போல் உள்ளது.’ என்று தங்களுக்குள் முனகிக் கொண்டனர். 

இப்போது அந்த புதிருக்கான விடை கிடைத்துவிட்டது. ஆம்! அது வைகோவின் திடீர் மு.க. பாசம்தான்.  1994_ல் கருணாநிதி மற்றும் தனக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கினால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் எனும் தனி கழகத்தை உருவாக்கினார் வைகோ. இரு கழகத்தினரும் மிகப்பெரும் வேற்றுமையுடன் சில காலம் மோதிக் கொண்டே இருந்தனர். அதன் பின் அரசியல் சக்கரம் வைகோவை சில சமயங்களில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தளத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. ஆனால் அது வெற்றிகரமாக தொடரவில்லை. இணக்கு காலம் சொற்பமாகவும், பிணக்கு காலம் மிக நீட்சியானதுமாகவே தொடர்ந்திருக்கிறது இரு கட்சிகளுக்கும் இடையில். 

உணர்ச்சிப் பெருக்கின் வடிவமான வைகோ இடைக்காலத்தில் தி.மு.க.வுக்கு எதிரான அரசியல் மேடைகளில் நின்று கருணாநிதியை மிக கூர்மையாக விமர்சனம் செய்திருக்கிறார். இதற்கு தி.மு.க. தளத்திலிருந்தும் மிக கடினமான பதில்கள் சவால்களாக வந்து விழுந்திருக்கின்றன. அதிலும் சமீப சில மாதங்களுக்கு முன் தவறுதலாக வைகோவின் வார்த்தைகள் கருணாநிதியின் பரம்பரைத்தன்மையை கூட உரசிப்பார்த்தன. இந்த விவகாரம் மீடியாவில் வைரலாகியதும் சட்டென்று ’உள்நோக்கத்தோடு என் அண்ணனை அப்படி குறிப்பிடவில்லை.’ என்று கண்ணீர் மல்க அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வைகோ. 

ஆனால் தி.மு.க.வினர் இந்த உரசலை மறக்கவில்லை எளிதாக. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதியை வைகோ பார்க்க சென்றபோது தொண்டர்களும், சில நிர்வாகிகளும் அவரது வாகனத்தை மறித்தனர். ஆதங்கத்துடன் அந்த இடத்திலிருந்து வெளியேறினார் வைகோ. அந்த விவகாரத்தில் ஸ்டாலின் மீது வைகோவுக்கு மிகப்பெரிய ஆதங்கம் இருந்தது. ஆனால் வைகோவுக்கு மலேசியாவில் நிகழ்ந்த அவமரியாதைக்கு ஸ்டாலின் கண்டன குரல் கொடுத்தது அந்த பிணக்கின் வீரியத்தை சற்றே குறைத்தது. 

இப்படியாக போய்க் கொண்டிருந்த நிலையில்தான் மிக சமீபத்தில் திடுப்பென கோபாலபுரம் சென்று கருணாநிதியை நலம் விசாரித்தார் வைகோ. நெகிழ்வான முகத்துடன் ஸ்டாலின் ஒரு புறமும், கலங்கிய கண்களுடன் துரைமுருகன் மறுபுறமும் நின்று வைகோவின் கரங்களைப் பற்ற, கோபாலபுரம் இல்லமே உணர்ச்சிப் பிரவாகமானது. 

வயோதிகத்தால் படுத்த படுக்கையானவர்களின் வாழ்வில் உச்ச மருத்துவ வசதிகள் கூட ஏற்படுத்த இயலாத ஆச்சரிய முன்னேற்றத்தை, நெடுநாள் பிரிவுக்குப் பின் கூடும் ஒரு உறவு கொண்டு வந்துவிடும். ஆம்! வைகோவின் விசிட் அன்று கருணாநிதியின் முகம் மற்றும் உடலசைவுகளில் ஆச்சரிய முன்னேற்றம். அதுவரையில் அவரது விழிகள் மட்டுமே அசைந்து கொண்டிருந்தன, சில நாட்களுக்கு முன் திருமாவளவன சென்று பார்க்கும் சமயத்தில் முகமும் அசையுமளவுக்கு முன்னேறியிருந்தவர், வைகோ வந்த அன்று தன் உள்ளத்தையும் அசைத்தார். அந்த அசைவு அவரது கண்களில் பளிச்சிட்டதை வைகோவும் உணர்ந்தார். 

’நான் கிளம்புகிறேன் என்றதும் என் அண்ணனுக்கு மனம் விட்டுப்போனது. எனக்கும் மனம் தாளவில்லை. அதனால் கூடுதலாக கொஞ்ச நேரம் இருந்துவிட்டு பிரிய மனமே இல்லாமல் விடைபெற்றேன்.’ என்று கோபால புர இல்ல வாசலில் நின்று மீடியாவிடம் உருகினார் வைகோ. 

கருணாநிதியை வைகோ சந்தித்தது வெறும் அண்ணன் _ தம்பி இடையிலான பாசப்போராட்டமாக முடிந்துவிடாமல் இதை திராவிட மீட்பு இயக்கமாகவே மாற்றும் முயற்சிகள் உருவாக்கப்பட்டதுதான் இதில் ஹைலைட்டே. 

இதன் வெளிப்பாடாகத்தான் வரும் 5_ம் தேதியன்று சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் முரசொலி பவள விழா (மறு) கூட்டத்தில் வைகோவும் கலந்து கொள்வது சாத்தியமாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வ அழைப்பிதழிலேயே வைகோவின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

வைகோவுடன் மக்கள் நல கூட்டணியிலிருந்த அத்தனை கட்சிகளும், அதன் மாநில தலைவர்களும் இந்த மேடையில் இணைகிறார்கள். வைகோவின் பேச்சில் வகுப்புவாதத்துக்கு எதிராக அனல் தெறிக்கும் என்கிறார்கள் ம.தி.மு.க.வினர். ஸ்டாலினும் தெறிக்க விட தயார் என்று முஸ்டி முறுக்குகிறது தி.மு.க., திருமாவின் தீப்பறக்கும் உரையும், கம்யூனிஸ தலைவர்களின் சித்தாந்த செதுக்கல்களுமாக அந்த மேடை ஒரு புதிய அரசியல் கூட்டணிக்கான விதைகளமாக மாறும் வாய்ப்பிருக்கிறது. 

பொதுவாக வைகோவுக்கும் ஸ்டாலினுக்கும் ஆகாது. சொந்த வீட்டில் யாருக்கு முதல்(வர்) மரியாதை? என்பதில் இருவருக்குமிடையில் துவக்கத்திலிருந்தே உரசல். அது நேற்று வரை தொடர்ந்தது. ஆனால் இன்ரு தங்கள் வீட்டுக்குள்ளேயே பொது எதிரியாக பா.ஜ.க. வந்து நிற்கும்போது வேறுவழியின்றி இருவரும் சேர்ந்தடிக்க துடிக்கிறார்கள். 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கொண்டவர்தானே வைகோ? எனலாம். ஆனால் அன்று இருந்த பா.ஜ.க.வுக்கும் இன்று இருக்கும் பா.ஜ.க.வுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அன்று மாநில சுயாட்சி தத்துவத்தை காக்க கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருந்தார்கள். இந்த தைரியம் வைகோ உட்பட திருமா, கம்யூனிஸ்டுகள் என்று எல்லோருக்கும் இருந்தது. 

ஆனால் இன்று தங்களின் கண்ணுக்கு எதிரேயே அ.தி.மு.க. எனும் ஐராவதம் பா.ஜ.க.வின் அம்புகளால் அணுவணுவாக வேட்டையாடப்படுவதை கண்ட பின் கூடி நிற்பதை தவிர வேறு வழியில்லை. ஸ்டாலினும் இதை உணர்ந்துதான்  தங்கள் முரசொலி மேடையை ஒற்றுமைக்கு முத்தாய்ப்பாக அமைத்துள்ளார். 

கம்யூனிஸ்டுகளும், விடுதலை சிறுத்தையும் இனி அடுத்து தி.மு.க.வின் தோள்தான் எனும் நிலையை எப்போதோ எடுத்துவிட்டன. ஆக முரசொலி மேடையில் பா.ஜ.க.வுக்கு எதிரான போர் முரசு பலமாக கேட்கும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. மாநில சுயாட்சி தத்துவ கோஷங்கள் விண்ணைப் பிளக்கலாம். 

ஆனால் பாவம் நமோ நாமத்தை உரக்கப்பாடுவதால் ஆளும் அ.தி.மு.க. அணியின் காதுகளில் அது விழ வாய்ப்பே இல்லை!

சரி, கட்டுரையின் துவக்கத்தில் கண்ட அந்த கதையை மீண்டும் ஒரு முறை வாசித்து பாருங்கள்! இப்போது காளைகள் யார் யார், சிங்கம் யாரென்பது புரியும். கதையில் வேண்டுமானால் சிங்கம் முயற்சி தோற்று ஓடியிருக்கலாம். ஆனால் சந்தர்ப்பவாதமே சாஸ்வதமான அரசியலில் எந்த நேரத்தில் என்ன நடக்குமென்பது யாருக்கு தெரியும்? மேயப்போவது யார், மிரளப்போவது யார்? 
கவனிப்போம்!...

click me!