
’அத்திப்பட்டி ஞாபகமிருக்குதா?’ என்று சிட்டிசன் அஜித் கோர்ட் கூண்டிலேறி கூக்குரலிட்டது போல் தமிழகத்தில் ஆட்சி மன்றத்தின் பாழடைந்த பால்கனியில் நின்று கொண்டு பரிதாப குரல் எழுப்புகிறது ஜனநாயகம்.
தங்கள் வழிக்கு வரவே வராத தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை இன்று ஒற்றை அறிவிப்பின் மூலம் தகுதி நீக்கம் செய்துவிட்டார் பேரவை தலைவர் தனபால். இதைத்தொடந்து பற்றி எறிந்து கொண்டிருக்கிறது தமிழகம்.
’இது ஜனநாயகத்துக்கே அடுக்காத முன்னுதாரணம் அக்கிரமம்’ என்று எதிர்கட்சிகள் ஏகவசனத்தில் தினகரன் அணிக்கு சப்போர்ட்டாக குரல் கொடுக்கின்றன. ஆனால் ஆளும் தரப்போ 1986 வது ஆண்டு சட்டதின் படி, அந்த உள் விதிப்படி, இந்த வெளி விதிப்படி என்று ஹிஸ்டரி புக்கை தூசி தட்டி எடுத்து தன் தரப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. காட்சி ஊடகங்களில் மாலை நேர விவாதத்துக்காக அந்தந்த சேனல்களின் நிலைய கலைஞர்கள் தங்களது காஸ்ட்யூமை அயர்ன் செய்ய கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் சத்தமில்லாமல் ஒரு சவுக்கடி ஸ்டேட்மெண்ட் வந்து விழுகிறது. அது ‘18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 215ஆக குறைந்தது.’ என்பதுதான். அரசு அதிகாரப்பூர்வமாக இப்படியொரு நிலை வந்துவிட்டால் அந்த 18 தொகுதிகளும் இப்போது இந்த மாநிலத்தில் இல்லை என்று தானே அர்த்தம்.
ஆக ஆண்டிப்பட்டி, மானாமதுரை, பெரியகுளம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிப்பட்டி, பெரம்பூர், சோளிங்கர், திருப்போரூர், தஞ்சாவூர், நிலக்கோட்டை, சாத்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட 18 தொகுதிகளும் தமிழக அரசியல் வரைபடத்திலிருந்து கணப்பொழுதில் காணாமல் போயிருக்கின்றன.
இந்த தொகுதி மக்கள் தமிழகத்திலேயே இப்போது இல்லை, இவர்களின் முதலவர் தானைத்தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லை, இவர்கள் தங்களின் மாண்புமிகு துணை முதல்வராக தர்மயுத்த தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை பெருமை பட உரிமை கொண்டாட முடியாது.
இவர்களின் சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லை, இரவானதும் பிக் பாஸில் கரையும் மானமிகு தமிழ் கூட்டத்திலிருந்து இவர்கள் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள், வரும் தைப்பொங்கலுக்கு இவர்கள் ஜல்லிக்கட்டு ஆட வாய்ப்பில்லை...இப்படி இவர்கள் இழந்து நிற்பது எவ்வளவோ எவ்வளவோ!
ஆக மொத்தத்தில் தனது பரந்த தேகத்தின் 18 உறுப்புகளை இழந்து அத்திப்பட்டியாகி நிற்கிறது நம் தமிழகம்.
இதையெல்லாம் பற்றி நம்மை ஆள்வோருக்கு கவலையில்லை. 18 தொகுதிகளின் மறைவை முன்னிட்டு வெளிவந்திருக்கும் மிக முக்கிய இனிப்புச் செய்தி என்ன தெரியுமா?...தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற எண்ணிக்கை வெறும் 215 தான்.
இதனடிப்படையில்தான் சட்டமன்ற பெரும்பான்மை எண்ணிக்கை கணக்கிடப்படும். எடப்பாடி மற்றும் பன்னீரின் கைகளிலிருக்கும் ஆதரவு எண்ணிக்கையை வைத்து மிக எளிதாக இந்த ஆட்சி காப்பாற்றப்பட்டு விடும் என்பதுதான். இது போக வேறென்ன வேண்டும்? ஸ்வீட் எடு, கொண்டாடு தமிழா.
ஜனநாயகம்டா!