ஜோசப் விஜய்யும், சில ஜோடனையற்ற கேள்விகளும்: எஸ்.ஏ.சி.யின் பகல் கனவிற்கு சில பதில் கணைகள்...

First Published Oct 28, 2017, 2:22 PM IST
Highlights
Special article about Joseph vijay and his fathers political dream


’எம்.ஜி.ஆர். போல் விஜய் வருவார்!’ என்று நடிகர் ஜோசப் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தட்டியிருக்கிறார்.  இது ஒரு பக்கம் இருக்கட்டும்!

மத்திய அரசுடன் மெர்சல் மோதிய விவகாரத்தில் பலரது முகத்திரை கிழிந்ததை தமிழகமும், தமிழக அரசியலை கவனிக்கும் வட இந்தியாவும் ஒப்புக் கொள்கிறது. அதில் முக்கியமானது...ஒரு பொழுதுபோக்கு சினிமாவில் சொல்லப்படும் வசனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்புத்தன்மையும், முதிர்ந்த மனப்பக்குவமும் கூட நடுவன் அரசுக்கு இல்லை! சாதி மற்றும் மதமில்லை என்று தன் படங்களில் ஆயாக்களையும், பாயாக்களையும் கட்டிப்பிடித்து ஆடும் நடிகர் விஜய்  ‘ஜோசப் விஜய்’ என்று தன்னை வலிந்து அடையாளப்படுத்தியிருப்பதன் மூலம் உள்ளூர அவர் மனம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் வர்ணத்தைத்தான் வலுவாக  ஏற்றிருக்கிறது என்பது புலனாகிறது!

சட்டத்தை சிரமேற் கொண்டு கடைபிடிக்க வேண்டிய ஹெச்.ராஜா போன்றோர்கள் புதுப்பட காட்சிகளை இணையத்தில் பார்த்துவிட்டு அதை பொதுவெளியில் ஒப்புக் கொள்ள தயங்க மாட்டார்கள், சட்டத்துக்குள் கட்டுப்பட்டு கிடக்க தான் சாமான்யனில்லை என அவரெல்லாம் நினைப்பது தெளிவாகிறது! வட்டி பிரச்னையால் நான்கு உயிர்கள் தீயால் தின்னப்பட்டிருக்கும் நிலையிலும் கோவணத்தை மறைக்க கூட வக்கில்லாத சினிமா பிரச்னைதான் முக்கியமென்று தமிழகம் பைத்தியம் பிடித்துக் கிடப்பதென்பது!...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 

இப்போது ஜோசப் விஜய்யின் தந்தை சொன்ன ஸ்டேட்மெண்டுக்கு வருவோம். எம்.ஜி.ஆர். போல விஜய் வருவார் என்று சொல்லியிருப்பதன் மூலம் எஸ்.ஏ.சி தன் குடும்பமானது ஒரு அதிகார மையமாக மாறவேண்டும் என்று விரும்புவது விளங்குகிறது. 

ஆசைப்படுவதற்கு இங்கே எல்லோருக்கும் சுதந்திரமிருக்கிறது! ஆனால் எம்.ஜி.ஆர். போல் முதல்வர் பதவிக்கு தன்னை ஒப்புக் கொடுக்கும் தகுதி விஜய்க்கு இருக்கிறதா? என்பதை அலசி, ஆராய்ந்து, தெளிவாக முடிவெடுக்க வேண்டிய உரிமையும், கடமையும், அவசியமும் தமிழகத்துக்கு இருக்கிறது. 
இந்துத்வத்தை பின்பற்றும் ஒரு அரசாங்கம் தன் மீது ஒரு நெருக்கடியை பாய்ச்சுகிறது என்றவுடன் ‘ஜோசம் விஜய்’ என்று தன்னை சிறுபான்மை ஆயுதத்தின் பின்னே, சிறுபான்மை வாக்கு வங்கியின் பின்னே ஒளித்து வைக்க நினைக்கும் விஜய்யை எப்படி மாஸ் தலைவனாக ஏற்பது? தாந்து ஒவ்வொரு புது பட ரிலீஸின் முன்பும் வேளாங்கன்னி கோயிலுக்கு தானே டிரைவ் செய்து சென்று பிரேயர் வைத்துவிட்டு வருவதும், கிறிஸ்துமஸ் காலத்தில் தன் கையால் விருந்து பரிமாறுவதும் விஜய்யின் வழக்கம்! என்று அவரது கூடாரம் பெருமை பேசுகிறதென்றால் அவரை எப்படி இந்த மண்ணின்  மைனாரிட்டி மக்கள் ‘எங்கள் தலைவன்’ என்று நம்புவது?

விஜய்யின் பஞ்ச் டயலாக்குகள் வீட்டு வரவேற்பறையிலுள்ள டி.வி. ஸ்கிரீனோடு நின்று போவதால் ‘தளபதிடா’ என்று இஸ்மாயில் மகனும், சேஷாத்திரி மகளும் பரவசப்படலாம். ஆனால் ’என் உச்சி மண்டையில கிர்ர்ர்...ருங்குது’ என்று ஆடிய இளைய தளபதி விஜய், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தி கொண்டு ‘ஜோசப் விஜய்’ எனும் பெயரில் ஓட்டு கேட்டால், அதை அவர்கள் எப்படி ரசிப்பார்கள்?

விஜய்யின் பிறந்த நாளன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் போடுவதும், ஸ்ஸோ சைக்கிள் ரேஸ் நடத்தி அண்டா தருவதும், வெயில் காலத்தில் நீர் மோர் பந்தல் அமைப்பதும்தான் ‘விஜய் நற்பணி இயக்க’த்தின் இத்தனை நாள் சாதனை என்றால் இதே சாதனையை தனுஷின் ரசிகர்களும், அதர்வாவின் ரசிகர்களும், சத்யனின் ரசிகர்களுமே செய்திருக்கிறார்களே!...

’ஏழை மாணவியை எம்.பி.பி.எஸ். படிக்க வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு கைவிட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி’, ‘வருமான வரி கட்டாமல் ஏமாற்றிய விஜய்’, ‘விஜய்யின் புதுப்படத்துக்கு ஆயிரங்களில் டிக்கெட் விலை. ஏழை ரசிகர்கள் விரக்தி.’ என்று தொடர்ந்து விமர்சனங்களும், புகார்களும் வந்து விழும் நிலையில் இவரை எப்படி மாற்றத்துக்கான தலைவர் என்று விளிப்பது?
இப்படி இன்னமும் ஆயிரம் கேள்விகள். 

மலையாளியான எம்.ஜி.ஆர். சினிமா வாயிலாக தமிழக முதல்வரானார். தமிழக நடிகரான விஜய்க்கு மலையாளத்தில் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. கோக்குமாக்கான இந்த விஷயங்கள் வேண்டுமானால் எம்.ஜி.ஆரையும், விஜய்யையும் ஒரே புள்ளியில் நிற்க வைக்கலாம். ஆனால் அவர் போல் விஜய் தலைவராகவும், முதல்வராகவும் ஆவார் என்று எஸ்.ஏ.சி. நினைத்தால் அது பகற்கனவின் உச்ச நிலை! என்கிறார்கள் அரசியலறிந்த விமர்சகர்கள். 
அது சரி, ஜோசப் விஜய்யின் அப்பாவின் கனவை கலைக்கவோ, தடுக்கவோ நமக்கென்ன உரிமையிருக்கிறது?!

click me!