
நடிகர் கமல் ஹாசன், கொசஸ்தலை ஆற்றை பார்வையிட்டது, வரவேற்கத்தக்கது என்றும், அரசியலுக்கு வருவதற்கு இது மட்டுமே போதுமானது அல்ல என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்த பொது மக்களை சந்தித்த கமல்ஹாசன், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எண்ணூர் கழிமுகம் பகுதியை பார்வையிட்ட கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
எண்ணூர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை மீட்கவும், அப்பகுதியை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
சுகாதாரம் குறித்து தமிழகம் முழுவதும் கமலஹாசன் ஆய்வு செய்தால் டெங்குவை தடுத்துவிடலாம் என்றும் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
மக்கள் பிரச்னைக்காக முதன்முதலில் நேரடியாக களத்தில் இறங்கியதற்கு கமலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கமல் ஹாசன், தீவிரமான மக்கள் பணியில் ஈடபட இருக்கிறார் என்பதையே இன்றைய களப்பணி உணர்த்துவதாகவும், அவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்காக யார் வந்தாலும் மகிழ்ச்சிதான் என்றும், அரசியலுக்கு வருவதற்கு இது மட்டுமே போதுமானதல்ல என்று கூறினார்.
தற்போதுள்ள சூழலைப் பயன்படுத்தி கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வர பார்ப்பதாகவும் கூறினார். மக்கள் புத்திசாலித்தனமானவர்கள்; யாரை ஆதரிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும் தமிழிசை கூறினார்.