
ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, டி.டி.வி.தினகரன், பாஜக , நாம் தமிழர் கட்சி என போட்டி பலமாக உள்ளது.
இரட்டை இலை சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் மதுசூதனன் உற்சாகமாக களமிறங்கி உள்ளார். இதே போன்று திமுக வேட்பாளர் மருது கணேசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கட்சி, சின்னம் என அனைத்தையும் இழந்த அதிமுக அம்மா அணியின் டி.டி.வி.தினகரனும், இந்த தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார்.
இதனிடையே நீண்ட வருடங்களாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என கூறிவந்த ரஜினிகாந்த் இந்த பிறந்த நாளுக்கும் அரசியல் களம் குறித்து வாய்திறக்கவில்லை. அதனால் இந்த பிறந்த நாளும் அவரின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே. ஆனால் மக்கள் செல்வாக்கு ரஜினிக்கு அதிகம் உள்ளதாக அவரின் நண்பர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் கூறி வருகின்றனர்.
இதுதான் இப்படி என்றால் ரஜினியின் உயிர் நண்பன் என்று சொல்லப்படும் கமல் ரஜினி அரசியலுக்கு வருவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்ட நிலையில் அமைச்சர்களை தூண்டி அவர் அரசியலுக்குள் வந்துவிட்டார்.
ஆ ஊன்னா மக்களை துணைக்கு அழைக்கிறார். சில நாட்களில் கட்சியும் கொடியும் அறிமுகப்படுத்துவேன் என கூறி வருகின்றார்.
அவரை தொடர்ந்து ஏற்கனவே தலைவா படம் மூலம் ஜெயலலிதா இருக்கும்போதே அரசியலுக்கு அடித்தளம் போட்டார் நடிகர் விஜய். ஆனால் அது பலிக்கவில்லை. அதைதொடர்ந்து மெர்சல் படம் மூலம் மத்திய அரசுக்கு எதிராக பேச துணிந்துவிட்டார். இதன் மூலம் விஜயும் அரசியலுக்கு வரலாம் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இவர்களுக்கெல்லாம் கடைசியாக திடீரென ஆர்.கே.நகர் அரசியல் மூலம் உள்ளே புகுந்தவர்தான் நடிகர் விஷால். இவர் திடீரென எந்த பூச்சாண்டியும் காட்டாமல் நேரடியாக களத்தில் சுயேட்சையாக குதித்தார். ஆனால் பல்வேறு காரணங்களை காட்டி தேர்தல் ஆணையம் இவரை நிராகரித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜநாயகம், ஆய்வு அறிக்கையையும் வெளியிட்டார். கடந்த 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 156 தெருக்களில் 3120 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதில், நடிகர் விஜய்க்கு 11.3 சதவீதமும், கமலுக்கு 10.7 சதவீதமும், ரஜினிக்கு 5.1 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது.
இதில் கவனிக்க வேண்டியது விஷால், விஜய் போன்ற இளம் நடிகர்களைவிடவும் குறைவான அரசியல் செல்வாக்கு பெற்றுள்ளார் ரஜினி.
இதில் நடிகர் விஷாலுக்கு 15.2 சதவீதம் மக்கள் ஆதரவு அளித்துள்ளார்களாம். மக்கள் கருத்தை வைத்து பார்த்தால் விஷால் போட்டியிருந்தால் களம் வேறு மாதிரி மாறியிருக்கும் என தெரிகிறது.