
நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலில், பாஜக கட்சி 104 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், பாஜக கட்சி தனிப்பெரும்பான்மை அமைக்கத் தேவையான 112 இடங்கள் தேவை, இதனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, யார் ஆட்சி அமைப்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில், கர்நாடக ஆளுநர் வஜூ பாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தார். நேற்று காலை பெங்களூரில் நடந்த விழாவில் கர்நாடகாவின் 23 வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.
இதை எதிர்த்து மஜத-காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இன்று நடைபெற்ற அந்த வழக்கின் விசாரணையில், பெரும்பான்மை இல்லாத எடியூரப்பா அரசை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது பற்றி சரமாரியான கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டது.
இதைத்தொடர்ந்து, நாளை மாலை 4 மணிக்கு, கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு முன், அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்க வேண்டும் எனவும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தற்காலிக சபாநாயகரை நியமனம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.வி.தேஷ்பாண்டேவும், பாஜக கட்சி சார்பில் கே.ஜி.போபையாவும் தற்காலிக சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதைத் தொடர்ந்து, கர்நாடக ஆளுநர் வஜூ பாய் வாலா, பாஜக எம்எல்ஏவான கே.ஜி.போபையாவை தற்காலிக ஆளுநராக நியமனம் செய்தார்.
சபாநாயகராக வயதில் மூத்தவரையே தேர்வு செய்யவேண்டும் என்பது சட்டம்.இதில் காங்கிரஸ் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ஆர்.வி. தேஷ்பாண்டேவுக்கு வயது 72, பா.ஜ.க. பரிந்துரைந்த கே.ஜி.போபையாவுக்கு வயது 62. இதில் ஆளுநர் இதிலும் ஒருசார்புடைமையுடன் செயல்பட்டுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கேஜி போபையா கர்நாடகாவின் தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுள்ளார். கேஜி போபையா ஏற்கனவே, கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை கர்நாடகாவின் சபாநாயகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஆளுநரின் சபாநாயகர் நியமனத்தில் ஆளுநரின் ஒருதலைபட்சமான முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.