
ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம்
தமிழக நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் மானியக்கோரிக்கை தாக்கல் செய்வது தொடர்பான கூட்டத்தை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி முடித்துள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை மீண்டும் தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவும் இன்று அறிவித்துள்ளார். இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்த தேதியில் எந்த துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்வது என்பது தொடர்பான முடிவுகள் எடுப்பதற்காக வருகிற 30 ஆம் தேதி அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இட நெருக்கடி
நிதி அமைச்சரின் பதிலுரையை அதிமுக புறக்கணித்து சென்றது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையையில் தனது உரையை படிக்கும் போது நிதி அமைச்சர் பி.டி.ஆர் அவசர பணி நிமித்தமாக வெளியே சென்றதாகவும், தன்னிடம் கூறி விட்டுத்தான் வெளியேறினார் என கூறினார். இதனை ஒரு காரணமாக அதிமுக கூறி வெளிநடப்பு செய்தது தேவையற்றது என கூறினார். தமிழக சட்டப்பேரவையில் தற்போது இட நெருக்கடி அதிகமாக இருப்பதாக விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியதற்கு பதில் அளித்த சபாநாயகர், கடந்த திமுக ஆட்சிக் காலத்தின்போது மிக பிரம்மாண்டமாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்ற வளாகம் அமைக்கப்பட்டதாகும், இதனை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்ததாக கூறினார்.
முதலமைச்சர் முடிவு எடுப்பார்
இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிச்சாமியும் அந்த இடத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தவில்லை. தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்டரங்கில் தான் நடத்தியதாக தெரிவித்தார். எனவே இந்த கேள்வியை அப்போது கேட்காமல் இப்போது ஏன் கேட்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பினார். இருந்தபோது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்காமல் நல்ல முடிவை முதலமைச்சர் விரைவில் எடுப்பார் என்று சபாநாயகர் அப்பாவும் தெரிவித்தார்.