எஸ்.பி.வேலுமணி வழக்கை முடித்து வைக்கலாம்.. தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்..!

By vinoth kumarFirst Published Oct 20, 2021, 8:11 PM IST
Highlights

வேலுமணி தரப்பில் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அதேசமயம், தனக்கு எதிரான வழக்கு எந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என தெரிவித்தார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், 'அறப்போர் இயக்கம்' மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரியும் அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகளில் வேலுமணி தாக்கல் செய்த பதில் மனுவில்;- முகாந்திரம் இல்லை என்று அரசால் கைவிட முடிவு எடுத்த வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும் உள்நோக்கத்துடனும் எனக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. 

டெண்டர் நடைமுறைகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வழக்கில் எந்த வகையிலும் தொடர்பில்லாத அறப்போர் இயக்கம் என்னுடைய அரசியல் விரோதிகளுக்கும் டெண்டர் கிடைக்காதவர்களுக்கும் நிழலாக இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளது. எனவே இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல என்பதால் இதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த வழக்குகள் மீண்டும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்ததது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மேற்கொண்டு இந்த விவகாரத்தை நிலுவையில் வைக்காமல் 'அறப்போர் இயக்கம்' மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என தெரிவித்தார்.

'அறப்போர் இயக்கம்' தரப்பில் வழக்கறிஞர் வேலுமணி மீது வழக்குப்பதிவது மட்டும் கோரிக்கை அல்ல. உடந்தையாக இருந்தவர்கள், பலனடைந்தவர்கள் ஆகியோரை வழக்கில் சேர்க்கும் வகையில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் எனவும், மேற்கொண்டு நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என தெரிவித்தார். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விட்டதால், தங்கள் வழக்கை முடித்து வைக்கலாம் என தெரிவித்தார். வேலுமணி தரப்பில் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அதேசமயம், தனக்கு எதிரான வழக்கு எந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, இரு வழக்குகளின் விசாரணையையும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

click me!