மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்கிறது அதிமுக - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

First Published Jul 31, 2017, 1:24 PM IST
Highlights
soon official announcement admk in modi cabinet


மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவை விரைவில் மாற்றப்படும் நிலையில், அதில் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. கட்சி இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான இறுதிக்கட்ட பேச்சுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் முதல்வாரத்தில் இதற்கான முறைப்படியான அறிவிப்புகள் வெளியாகும என்று தெரிகிறது.

அவ்வாறு மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெற்றால் கடந்த 1999ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக்குப் பின் மீண்டும் 18 ஆண்டு கால இடைவெளியில் மீண்டும் சேர்கிறது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷாவும் அதிமுகவை அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான பணியை மூத்த பா.ஜனதா தலைவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தேர்தல் 2019ம் ஆண்டு வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை இன்னும் வலிமைப்படுத்திக் கொள்ள பா.ஜனதா விரும்புகிறது. அதில் ஏற்கனவே நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை இழுத்துவிட்ட நிலையில், இப்போது அதிமுகவையும் சேர்க்க பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.  

அதுமட்டுமல்லாமல் 50 எம்.பி.களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்த 3-வது பெரியகட்சியாக அதிமுக திகழ்வதால், அந்த கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர மத்திய அமைச்சர் பதவியை வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் முதல்வாரத்தில் மாற்றப்படும் நிலையில், ஐக்கியஜனதா தளம், அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து சிலருக்கு அமைச்சர்கள் பதவிகள் வழங்கப்படலாம்.

மேலும், மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமிப்பது, அமைச்சரவை மாற்றம், பா.ஜனதா கட்சி பொறுப்புகளில் மாற்றம் ஆகியவை ஆகஸ்ட் முதல்வாரத்தில் எடுக்கபட வாய்ப்பு உள்ளது.

மேலும், ஆகஸ்ட் 20 ந்தேதிக்கு பின் பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா தமிகத்துக்கு 3 நாள் பயணமாக வருகிறார். அதற்குள் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்த அறிவிப்பு வெளியாகும். அதுமட்டுமல்லாமல் தென் மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தில் 50 எம்.பி.க்கள் இருந்து கொண்டு மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் இல்லாமல் இருப்பது நியாமில்லாதது என்ற அடிப்படையில் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளது.  

அதிலும் சமீபக காலங்களாக தமிழகத்தின் அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடிைய நீட் தேர்வு விவகாரத்தில் அடிக்கடி சந்திப்பதால், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவு நெருக்கமாகி உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அல்லது அதற்கு முந்தைய பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தமிழகத்தில் இருந்து 10 மத்திய அமைச்சர்கள் வரை இருந்தனர். ஆனால், தற்போது கன்னியாகுமரி தொகுதியைச் சேர்ந்த பா.ஜனதாவின் பொன் ராதா கிருஷ்ணன் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், மத்திய அமைச்சரவையில்  தமிழகத்துக்கு எந்தவிதமான பிரதிநிதித்துவமும் இல்லாமல் இருந்தால், தேர்தல் நேரத்தில் மக்களை சந்தித்து ஓட்டுக் கேட்பது இயலாததாகிவிடும். அது எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கிவிடும் என்பதால், அடுத்து வரும் அமைச்சரவை மாற்றத்தில் அதிமுகவுக்கு சில பிரதான இடங்கள் ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

click me!