
ஒ.பி.எஸ் அணியுடன் நாளை அல்லது நாளை மறுநாள் சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெறும் என எடப்பாடி ஆதரவாளர் வைத்தியலிங்கம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
சசிகலா சிறைக்குச் சென்ற போது அதிமுகவுக்குள் என்ன மாற்றங்கள் ஏற்பட்டதோ, அதே போன்ற மாற்றங்கள் தினகரனின் கைதுக்கு பின்னரும் நிகழ்ந்து வருகிறது.
இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் புகைப்படங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் நீக்கப்பட்டன.
சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து நிரந்திரமாக நீக்குவதற்கான தொடக்கப்புள்ளியே இந்நடவடிக்கை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
இந்தச் சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு எம்.பி.வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒ.பி.எஸ் அணியுடன் நாளை அல்லது நாளை மறுநாள் சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், பேச்சுவார்த்தைக்கு தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.