
சென்னையில் அதிமுகவைச் சேர்ந்த 25 எஸ்.சி.எஸ்.டி. சட்டமன்ற உறுப்பினர்கள் ரகசிய கூட்டத்தை நடத்தி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவுக்குள் முன்பு ஏற்பட்ட கோஷ்டிப் பூசல் தற்போது பதவிச் சண்டையாக வெடித்துள்ளது. முதல் அமைச்சர் பொறுப்பு மற்றும் பொதுச்செயலாளர் பதவியை அடைந்தே தீருவது என பன்னீர் அணியும் எடப்பாடி டீமும் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறது.
இதுவரை நாம் பார்த்து வந்த அரசியல் டூவிஸ்ட்டுகளுக்கு எல்லாம் ஒருபடி மேலாக அதிகமுகவைச் சேர்ந்த 25 எஸ்.சி.எஸ்.டி. எம்.எல்.ஏ.க்கள் ரகசியக் கூட்டத்தை கூட்டியுள்ளனர். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்.டீம்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஆட்சியிலும் கட்சியிலும் அதிகாரம் உள்ள பதவிகளை யார் வழங்குகிறார்களோ அவர்களுக்கு இனி ஆதரவு என்று சிலர் வெளிப்படையாகவே பேசினார்களாம்.காலம் முழுவதும் ஆதிதிராவிடர், சமூக நலத்துறை மட்டும் வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பொதுப்பணி, நெடுஞ்சாலை, போக்குவரத்துப போன்ற முக்கிய இலாக்கா பெறவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடியும், மூத்த நிர்வாகிகள் கூட்டத்தை ஓ.பி.எஸ். நடத்தி முடித்துள்ள நிலையில் தற்போது எஸ்.சி.எஸ்.டி. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தியிருப்பது அதிமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாங்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து 25 பேரும் ராஜினாமா செய்வார்கள் என்று கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.