
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
சசிகலா சிறைக்குச் சென்ற போது அதிமுகவுக்குள் என்ன மாற்றங்கள் ஏற்பட்டதோ, அதே போன்ற மாற்றங்கள் தினகரனின் கைதுக்கு பின்னரும் நிகழ்ந்து வருகிறது. டிடிவி நேற்றிரவு கைது செய்யப்பட்டது தான் தாமதம். இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் புகைப்படங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் நீக்கப்பட்டன.
சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து நிரந்திரமாக நீக்குவதற்கான தொடக்கப்புள்ளியே இந்நடவடிக்கை என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இந்தச் சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் முதல் அமைச்சர் பதவியை நானே தொடர்ந்தால் தனக்கு யார் எல்லாம் ஆதரவு அளிப்பீர்கள் , இல்லை பன்னீருக்கே முதல் அமைச்சர் பதவியை அளிக்க வேண்டும் என்று விருப்பமுடையவர்கள் யார் என்பது குறித்தும் தீர்க்கமாக விவாதிக்கப்பட்டது.
எடப்பாடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருந்த அதேவேளையில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிரீன்வேஸ்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வந்த இக்கூட்டத்தில், செம்மலை, மைத்ரேயன்,கே.பி.முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர்.