
உ.பி.யில் இன்று நடைபெற இரக்கும் 4-வது கட்ட தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்காளர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதி இருக்கிறார். அதில், ‘‘உங்களுடைய நலத்திட்டங்களைப் பறித்துக்கொண்ட ‘சக்தி’களை தோற்கடிக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
உடல்நலக்குறைவு
உத்தரப்பிரதேசம், நேரு-இந்திரா காந்தி குடும்பத்தினரின் தொகுதி இடம்பெற்றுள்ள மாநிலம் ஆகும். தற்போது சோனியாவும் ராகுலும் உ.பி.யில் இருந்துதான் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.
உடல் நலக்குறைவு காரணமாக இந்த தேர்தலில் சோனியா காந்தி பிரசாரம் மேற்கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
உருக்கமான வேண்டுகோள்
இந்த நிலையில், இன்று நடைபெற இருக்கும் 4-வது கட்ட தேர்தலையொட்டி உ.பி. வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உருக்கமான கடிதம் ஒன்றை சோனியா எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது-
‘‘உ.பி. மாநிலத்தில் வளர்ச்சித்திட்டங்கள் தொடங்குவதற்காக காங்கிரசுக்கு வாக்களித்து எனது கரத்தை பலப்படுத்துங்கள். சில காரணங்களுக்காக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு என்னால் பிரசாரம் செய்ய முடியவில்லை. எனவே இந்த கடிதத்தை எனது வேண்டுகோளாக எடுத்துக்கொள்ளுங்கள்.
மோடி மீது தாக்கு
இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘நல்ல காலம் பிறக்கும்’ என உறுதி அளித்திருந்த மோடி அரசு, அதற்கு மாறாக மக்களிடம் இருந்த அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டது. தனது பதவி நாற்காலியை காப்பற்றிக்கொள்வதற்காக இதை செய்து இருக்கிறார்.
நாட்டு மக்கள் அனைவரும் ரேபரேலி மற்றும் அமேதியை (சோனியா, ராகுலின் மக்களவை தொகுதிகள்) ஆர்வத்துடன் எதிர் நோக்கி காத்து இருக்கிறார்கள். இந்தத் தொகுதி வாக்காளர்கள் காங்கிரசுக்கு வாக்களித்து எனது நம்பிக்கைக்கும் உணர்வுகளுக்கும் ஆதரவு கொடுங்கள்.
வேதனை
தற்போதுள்ள மத்திய அரசு, நலத்திட்டங்களின் பயன்களை மக்களுக்கு கிடைக்க விடாமல் வேண்டும் என்றே தடுத்து வரும் தகவலை கேள்விப்பட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
எந்த ஒரு அரசாவது தனது சொந்த மக்களுக்கு எதிராகவும், அவர்களை பலவீனப்படுத்தும் வகையிலும் செயல்படுவதை நீங்கள் எப்போதாவது பார்த்தது உண்டா?.
ரூபாய் நோட்டு தடை
குறிப்பிட்ட ஒரு சிலருக்காகவும், சில தொழில் அதிபர்களுக்காக மட்டுமே அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக ஏழை மக்களின் நலன்களை பறி கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
மோடி அரசின் ரூபாய் நோட்டு தடையால் வர்த்தகர்கள், இளைஞர்கள், பெண்கள், நடுத்தர மக்கள் மற்றும் சிறுபான்மையோர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வாழ்வின் அங்கம்
உங்கள் பிரதிநிதிகளாக நாங்கள் செயல்படுவது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகவும் பெருமை அளிக்கிறது.
ரேபரேலியும் அமேதியும் எங்களுடைய வாழ்வின் ஒரு அங்கமாக விளங்குகிறது. எங்களுடைய இன்றைய நிலைக்கான முழு பெருமையும் உங்களையேச் சாரும்’’.
இவ்வாறு அந்த கடிதத்தில் சோனியா கூறி இருக்கிறார்.