சோனியா, ராகுல், பிரியங்கா சிறப்பு பாதுகாப்பு வாபஸ் !! மோடி அரசு அதிரடி முடிவு !!

By Selvanayagam PFirst Published Nov 8, 2019, 8:52 PM IST
Highlights

சோனியா, ராகுல், பிரியங்கா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவானது பிரதமரை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்கும் பொறுப்பும் எஸ்.பி.ஜி.க்கு வழங்கப்பட்டது. 

தற்போது பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரான, சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த பாதுகாப்பில் இருந்து வருகின்றனர்.

சமீபத்தில், உளவுத்துறையினர், உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், அமைச்சரவை செயலாளர் ஆகியோர் அளித்த தகவல்களின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அளிக்கப்பட்ட எஸ்பிஜியின் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.

எஸ்.பி.ஜி.க்கு பதிலாக அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கான எஸ்.பி.ஜி பாதுகாப்பை விலக்கி, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம்  முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நேரடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால் அவர்களுக்கான எஸ்.பி.ஜி பாதுகாப்பை திரும்பப் பெற்றால் பிரதமர் மோடிக்கு மட்டுமே எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.ஜி எனும் சிறப்புப்படை பாதுகாப்பு பிரிவில் சுமார் 3 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். 1988-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாதுகாப்பு படைக்கு ஆண்டுக்கு சுமார் 385 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகள் வரை இந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று விதிகள் இருந்தது. ஆனால், 2003-ம் ஆண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பொறுத்து பாதுகாப்பு காலத்தை நீட்டிக்கும் வண்ணம் விதித்திருத்தம் செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.

click me!