சோனியாவுக்கு ஷாக் கொடுத்த அவரது உதவியாளர்…. பாஜகவில் இணைந்தார் !!

By Selvanayagam PFirst Published Mar 14, 2019, 11:43 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாம் வடக்கன் பாஜகவில் இணைந்து சோனியா காந்திக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
 

நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையடுத்து  அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ளோர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியும் வருகின்றனர். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான டாம் வடக்கண்  இன்று காலை  மத்திய அமைச்சர்  ரவி சங்கர் பிரசாத்தின் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். 
 
இதற்கு டாம் வடக்கன் கூறும் காரணம், புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியின் கருத்து ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார். 

காங்கிரசின் கட்சியின் கருத்து நாட்டு நலனுக்கு எதிரானது. இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானேன். கட்சிக்காக நான் 20 ஆண்டுகளாக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஆனால், இப்போது என்னை தூக்கி எறிகிறார்கள். 

பரம்பரை அரசியல் காங்கிரஸில் உச்சத்தினை பெற்றுள்ளது.  இதன் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்துள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் என பிரதமர் மோடியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என வடக்கன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்த டாம் வடக்கண் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் விலகியது கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. பாஜகவில் இணைந்த டாம் வடக்கண் கேரளாவில் உள்ள ஒரு முக்கியமான தொகுதியில் பாஜக சார்பில் தேர்தலில் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.

click me!