தலைவர் பதவியை தூக்கியெறியும் சோனியா காந்தி... துடிப்பான தலைவரை தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் நெருக்கடி..!

By Asianet TamilFirst Published Aug 23, 2020, 9:18 PM IST
Highlights

 காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக சோனியா காந்தி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதனையடுத்து கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். கடந்த ஓராண்டாக காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிக்கும் நிலையில், அப்பதவியிலிருந்து அவர் விலக விரும்புவதாகக் கூறப்படுகிறது. அப்பதவியை மீண்டும் ஏற்குமாறு ராகுல் காந்தியை வலியுறுத்தியும், அவரும் அப்பதவிக்கு விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரம் செயல்படக்கூடிய துடிப்பான அனைவரும் அறிந்த தலைவரை நியமிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். 
இந்நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய அக்கட்சியைச் சேர்ந்த 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் புதிய  தலைவரை கட்சிக்கு தேர்வு செய்வது, காங்கிரஸ் செயற்குழுவில் தேர்தலை நடத்துவது, கட்சியைப் பலப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கடிதத்தில் 23 தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் புதிய தலைவரை காங்கிரஸ் கட்சிக்கு தேர்வு செய்வது பற்றி விவாதிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

click me!