சுதந்திரப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காத பாஜக வரலாற்றைத் திருத்தி எழுதுகிறது... சோனியா காந்தி பகீர்..!

By Thiraviaraj RMFirst Published Dec 28, 2021, 4:38 PM IST
Highlights

தேர்தலில் தோல்வி, வெற்றி, ஏற்றம் இறக்கம் வரும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், மக்களுக்குச் செய்யும் அர்ப்பணிப்பு சேவைதான் நிலையானது. 

சுதந்திரப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காத பாஜகவினர் வரலாற்றைத் திருத்தி எழுதுகின்றனர். சுதந்திரம் பற்றி பேச தகுதியானவர்கள் அல்ல பாஜகவினர் என சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் கட்சி தொடங்கி 137 ஆண்டுகள் ஆவதையடுத்து இன்று அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி., பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சிக் கொடியை ஏற்றிய பிறகு சோனியா காந்தி தொண்டர்களிடம் பேசினார். அப்போது, ''தேர்தலில் தோல்வி, வெற்றி, ஏற்றம் இறக்கம் வரும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், மக்களுக்குச் செய்யும் அர்ப்பணிப்பு சேவைதான் நிலையானது. காங்கிரஸ் கட்சி வளர்த்த கொள்கைகள், சித்தாந்தங்களை ஒருபோதும் சமரசம் செய்யாது.

பல பத்தாண்டுகளாக, பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது, எப்போதும் சவால்களை எதிர்த்துப் போராடியுள்ளது. இன்று 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த, உன்னதமான மற்றும் தன்னலமற்ற இந்தியர்கள் சிலரால் வடிவமைக்கப்பட்ட, வழிநடத்தப்பட்ட மற்றும் உத்வேகம் பெற்ற எங்கள் அமைப்பின் லட்சியங்கள், மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு நாங்கள் எங்களை மீண்டும் அர்ப்பணிக்கிறோம்.

நமது சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் இல்லாத, வெறுப்பு மற்றும் தவறான சிந்தனை கொண்ட பிரிவினைவாத சித்தாந்தங்கள் நமது சமூகத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பில் இப்போது அழிவை ஏற்படுத்துகின்றன. வரலாற்றில் இடம் பெற அவர்களுக்குத் தகுதியில்லாதபோது, அவர்கள் தங்களுக்குப் பங்கிருப்பதாகக் காட்டிக்கொள்ள வரலாற்றைத் திருத்துகிறார்கள். நம்முடைய மிகச்சிறப்பான நாடாளுமன்ற ஜனநாயகம் வேண்டுமென்றே சேதப்படுத்தப்படுகிறது.

இந்த அழிவு சக்திகளுடன் காங்கிரஸ் கட்சி போராடும். நமது உறுதியான தீர்மானத்தில் எந்த சந்தேகமும் வேண்டாம். நமது புனிதமான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நமது அடிப்படை நம்பிக்கைகளில் நாம் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்'' என அவர் தெரிவித்தார்.

காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, கட்சி கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைக்க இருந்தார். இந்நிலையில், கொடி கம்பத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்த கட்சி கொடியை ஏற்ற முயன்றார். கொடி சரியாக ஏறவில்லை என்பதால் அருகில் இருந்தவர் கொடியை ஏற்ற முயற்சித்து வேகமாக இழுக்க முயன்ற போது,கயிறு கழன்று சோனியா காந்தி அவர்களின் கைகளில் கொடி விழுந்தது.

137 வது ஆண்டு தினத்தில்,கட்சி கொடி கீழே விழுந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் வழக்கம் போல் நிகழ்ச்சிகள் தொடங்கின.இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

click me!