
கரூரில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் சுவர் விளம்பரங்களில் கருப்பு பெயிண்ட் பூசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்ம நபர்கள் சிலர் மோடி அண்ணாமலை முகத்தில் கருப்பு பெயிண்ட் பூசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வட இந்தியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் தென்னிந்தியாவில் தனது வியூகம் எடுபடவில்லை என்ற ஏக்கம் பாஜக தலைவர்கள் மனதில் இருந்து வருகிறது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஓரளவுக்கு கால் பதித்து இருந்தாலும் தமிழகத்தில் நுழையவே முடியவில்லை என்ற மனக்குறை பாஜகவினர் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒரு சில இடங்களில் பாஜகவினர் வெற்றி பெற்றிருப்பது அக்கட்சிக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் ஓரளவுக்காவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு அக்கட்சியினர் மத்தியில் இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது என்றே சொல்லலாம் குறிப்பாக கொங்கு மண்டலம் அதிமுக -பாஜகவுக்கு சாதகமான பகுதியாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தது. வானதி சீனிவாசன், அண்ணாமலை, வேல்முருகன், சிபி ராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அதற்கு ஒரு காரணமாக உள்ளது. அந்த வகையில் கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர் போன்ற பகுதியில் பாஜகவினர் தங்களது வாக்கு வங்கியை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
கரூர் கோட்டாட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் மோடி அண்ணாமலை படங்கள் வரையப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களின் உருவப் படங்களில் கருப்பு பெயிண்ட் பூசப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது கரூர் கோட்டாட்சியர் அலுவலகம் சுற்றுச்சுவரில் விளம்பரம் செய்வதில் பாஜக-திமுக இடையே மோதல் இருந்து வருகிறது. பின்னர் இதில் கைகலப்பு ஏற்பட்டு இந்த விவகாரத்தில் மாநகர போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக செல்ல அறிவுறுத்திய சம்பவும் நடந்துள்ளது. இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக பாஜகவின் சுவர் விளம்பரத்தை அழித்துவிட்டு, அங்கு திமுகவினர் விளம்பரம் எழுதியதாகவும் பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில்தான் பிரதமர் மோடியின் பிறந்த நாள் அன்று வரையப்பட்ட சுவர் விளம்பரத்தில் மர்ம நபர்கள் சிலர் கருப்பு பெயிண்ட் அடித்துள்ளனர். அதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி மற்றும் பாஜக முன்னணி தலைவர்களின் புகைப்படங்கள் கருப்பு பெயிண்ட்டால் அழிக்கப்படுகிறது. அதில் இரண்டு மர்ம நபர்கள் மோடி அண்ணாமலை ஆகியோரின் முகத்தில் கருப்பு பெயிண்ட் பூசுவது போன்ற காட்சிகளும், 2 நபர்கள் பாதுகாப்புக்காக தடியுடன் நிற்பது போன்ற காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சம்பவத்தால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.