ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி ரூ.40க்கு விற்கிறாங்க.. கடத்தலை தடுக்க ஸ்டாலினுக்கு சந்திரபாபு கடிதம்!

By Asianet TamilFirst Published May 24, 2022, 10:25 PM IST
Highlights

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்குக் கடத்திக் கொண்டு வரப்படும் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்கிறார்கள். பிறகு அந்த அரிசியை கிலோ ரூபாய் 40- க்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் விற்பனை செய்கிறார்கள். 

தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்குக் கடத்தப்படும் ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து நிறுத்தும்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் , “தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி தொடர்ந்து கடத்தப்படுகிறது. ஆந்திரா- தமிழகம் எல்லைப் பகுதியான சித்தூர் மாவட்டத்தின் வழியாகத்தான் ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்தல் நடக்கிறது. தமிழகத்தின் வாணியம்பாடி, தும்பேரி, பேர்ணாம்பட்டு உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தலுக்கு இருசக்கர வாகனங்கள் முதல் லாரிகள் வரை பயன்படுத்தப்படுகின்றன. என்னுடைய குப்பம் தொகுதிக்கு  வரும் ரேஷன் அரிசி கடத்தல் வாகனங்களை என்னுடைய தொகுதி மக்கள் பிடித்து காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகிறார்கள். 

என்னுடைய குப்பம் தொகுதியில் மட்டும் கடந்த 16 மாதங்களில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்குக் கடத்திக் கொண்டு வரப்படும் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்கிறார்கள். பிறகு அந்த அரிசியை கிலோ ரூபாய் 40- க்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் விற்பனை செய்கிறார்கள். எனவே, தமிழகம் மற்றும் ஆந்திரா மாநில எல்லைகளில் அதிக அளவில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ரேஷன் அரிசிக் கடத்தப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ரேஷன் அரிசியை கடத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கடிதத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 
 

click me!