
அரசியலில் நிலைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மக்கள் ஆதரவை பெற முடியாவிட்டாலும், அவர்களது வெறுப்பை சம்பாதிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அப்படி வெறுப்பை சம்பாதிப்பவர்கள், மக்கள் மன்றத்தால் நிராகரிக்கப் படுவார்கள். மக்கள் மத்தியில் நடமாடுவதும் கடினம்.
அதற்கு லேட்டஸ்ட் உதாரணம்தான், சசிகலா தரப்பு அதிமுகவின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி.
அவர் தினகரனை ஆதரித்து, ஆர்.கே.நகரில், நேற்று திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தபோது, அவர் மீது அழுகிய தக்காளி பழங்களையும், காய்கறிகளையும் வீசி அப்பகுதி பெண்கள் அவரை விரட்டி அடித்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில், பன்னீர் அணி வேட்பாளர் மதுசூதனன், நேற்று, 42வது வார்டில் உள்ள பாசுதேவ் தெருவில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
அதே பகுதியில் உள்ள மார்க்கெட் அருகில், தினகரனை ஆதரித்து சி.ஆர்.சரஸ்வதியும், திறந்த ஜீப்பில் நின்று, தொப்பி சின்னத்திற்கு ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக சென்ற மதுசூதனன் ஆதரவாளர்கள் சிலர், ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்; இடியாப்பம் சாப்பிட்டார் என, தினந்தோறும் சொன்னீர்களே என்ன ஆச்சு?
கடைசியில், ஜெயலலிதாவை பிணமாக தானே கொண்டு வந்தீர்கள் என்று என, கூச்சல் எழுப்பினர்.
மேலும், அம்மாவை நேரில் பார்த்தது போல, அம்மா சாப்பிட்டாங்க, நடக்கறாங்க, நல்லா பேசறாங்க, நாளைக்கு வந்துடுவாங்க என வண்டி வண்டியாக புளுகி தள்ளினீர்களே என்று வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், சரஸ்வதி வசமாக மாட்டிக் கொண்டு மேற்கொண்டு பேசமுடியாமல் தவித்தார்.
அப்போது அங்கு வந்த பெண்கள் மார்க்கெட்டில் கிடந்த அழுகிய தக்காளி, காய்கறிகளை எடுத்து, சரஸ்வதி மீது சரமாரியாக வீசத்தொடங்கி விட்டனர்.
இன்னும் கொஞ்ச நேரம் நின்றால், நிலைமை விபரீதம் ஆகிவிடும் என்று உணர்ந்த சி.ஆர்.சரஸ்வதி, அங்கிருந்து தலை தெறிக்க ஓடி எஸ்கேப் ஆனார்.