
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் சூரப்பாவுடனும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலாலுடன் நேரடியாக எடப்பாடி பழனிசாமி அரசு மோதல் போக்கை தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மிகப்பெரிய கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கி வருகிறது. இந்த அந்தஸ்து கிடைத்தால் பல்கலைக்கழகத்திற்கு சுமார் 1500 கோடி ரூபாய் வரை மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி கிடைக்கும். இதன் மூலம் பல்கலைக்கழகத்தின் தரத்தை உலகத்திற்கு தரத்திற்கு உயர்த்த முடியும். ஆனால் உயர் சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்றால் மத்திய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனையால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும், கல்வி கட்டணம் உயரும், வட மாநில மாணவர்கள் அதிகம் அண்ணா பல்கலையில் சேரும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதனால் மத்திய அரசின் உயர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தமிழக அரசு ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறது. ஆனால் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா இந்த விஷயத்தில் தன்னிச்சையாக மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி, உயர் சிறப்பு அந்தஸ்து கோரியது மிகப்பெரிய சர்ச்சையானது. இதனால் உயர்கல்வித்துறை அமைச்சர் மட்டும் அல்ல, சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகமும் கொந்தளித்தார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது ஒழுங்கீனமான நடவடிக்கை என்று அறிவித்தார்.
இதே நேரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனோ, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று பிரகடனம் செய்தார். இது கிட்டத்தட்ட மத்திய அரசுடன் போருக்கு செல்வதற்கு சமமாகும். ஏனென்றால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். இதனைத்தான் சூரப்பாவை வைத்து சாதித்துக் கொள்ள மத்திய அரசு முயற்சித்தது வருகிறது. ஆனால் உயர்கல்வித்துறை அமைச்சர் இப்படி தடலாடியாக அறிவித்திருப்பது மத்திய அரசுக்கு ஷாக் ட்ரீட்மென்டாகிவிட்டது.
இதே போன்று நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டப்பேரவை சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சுமார் ஒரு மாத காலமாக இந்த சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்து வருகிறார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு சட்ட விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுத்தால் தான் தமிழகத்தில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு கூறியது.
இது கிட்டத்தட்ட ஆளுநருக்கு செக் வைக்கும் நடவடிக்கை. அதாவது ஏற்கனவே பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக கேபினட் பரிந்துரை செய்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் நாட்களை கடத்தி வருகிறார் பன்வாரிலால். இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு உள்ஒதுக்கீட்டு விவகாரத்திலும் அதே பாணியை ஆளுநர் கையாள்வது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எரிச்சலைஏற்படுத்தியுள்ளது. எனவே தான் இந்த விவகாரத்தில் அவர் விரைந்து முடிவெடுக்க இப்படி ஒரு செக் வைத்துள்ளார் எடப்பாடியார் என்கிறார்கள்.
இதுநாள் வரை ஆளுநரை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்தது இல்லை. ஆனால் தற்போது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சூரப்பாவை தமிழக அரசு எதிர்த்துள்ளது. சூரப்பாவை நியமித்தது ஆளுநர் பன்வாரிலால். அந்த வகையில் தமிழக அரசின் எதிர்ப்பு சூரப்பாவிற்கு மட்டும் இல்லை, ஆளுநருக்கும் சேர்த்து தான். அதே சமயம் மருத்துவ படிப்பிற்கான உள்ஒதுக்கீடு விவாரத்தில் ஆளுநரை முடிவெடுக்க வைக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருப்பது எல்லாம் வேற லெவல் அரசியல் என்கிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க எடப்பாடியார் இன்னும் பல கெத்துகளை காட்டுவார் என்கிறார்கள்.