அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கும் சமத்துவபுரத்தைத் திறக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.
கடந்த 2006-11-ஆம் ஆண்டில் கருணாநிதி தலைமையில் அமைந்த திமுக ஆட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து சாதி மக்களும் வசிக்கும் வகையில் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 2010-11-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கண்ணமங்கலப்பட்டி என்ற கிராமத்தில் சமத்துவபுரம் அமைக்க முடிவாகி, 90 சதவீத பணிகள் முடிந்தன. ஆனால், இந்த சமத்துவப்புரத்தைத் திறப்பதற்கு முன்பாக 2011-இல் ஆட்சி மாறியது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டத்தை ஜெயலலிதா அரசு கிடப்பில்போட்டது.
மீண்டும் 2016ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தால், இந்த வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதும் அதிமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடித்ததால், இந்தச் சமத்துவபுரம் மீண்டும் கண்டுகொள்ளப்படாமலேயே போனது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்தச் சமத்துவபுரத்தைத் திறப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தற்போது புதர் மண்டி கிடக்கும் சமத்துவபுரத்தில் புதர்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும் வீடுகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாகப் பூட்டியே கிடந்ததால், பல வீடுகள் சேதமடைந்துள்ளன. எனவே இந்த வீடுகளின் உறுதித் தன்மையை ஆராய்ந்து, அதன் பிறகு பராமரிப்பு பணிகள் செய்து, பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.