சூடுபிடிக்கும் அரசியல் களம்... ஸ்டாலின் அடுத்த மூவிங் ஸ்டார்ட்… யெச்சூரியுடன் இன்று சந்திப்பு!

By vinoth kumarFirst Published Nov 13, 2018, 11:43 AM IST
Highlights

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இன்று சென்னை வருகிறார். சென்னையில் நடக்கும், கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில், அவர் பங்கேற்கிறார். பின்னர், இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில், மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை கலைக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதையொட்டி அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளனர். 

இதைதொடர்ந்து, பாஜகவுக்கு எதிராக, மதச்சார்பற்ற கட்சிகளை, தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். இதனால், கடந்த சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கர்நாடக முதல்வர் குமாரசாமி, திமுக, தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து, மெகா கூட்டணி அமைப்பது குறித்து, ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இன்று சென்னை வருகிறார். சென்னையில் நடக்கும், கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில், அவர் பங்கேற்கிறார். பின்னர், இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில், மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். அப்போது, வரும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து, இருவரும் பேச்சு நடத்த உள்ளதாக பேசப்படுகிறது.

 

ஏற்கனவே, தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் வரும் மெஜாரிட்டியை பொருத்து, ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் அதிமுக அரசு, தற்போதைக்கு இடைத் தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  

இந்த வேளையில், கம்யூனிஸ்ட் கட்சியினருடன் திமுக கூட்டணி பற்றி பேசும்போது, இடைத் தேர்தலுக்கு அஸ்திவாரம் போட இருப்பதாகவும், அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

click me!