ஸ்டாலினை கீழே தள்ளி அரசியல் செய்வதில் குறியாக இருக்கும் திருமா... அரசியலில் நான் சாணக்கியன்... திமுகவை தெறிக்கவிட பக்கா ஸ்கெட்ச்!

By vinoth kumarFirst Published Nov 13, 2018, 11:07 AM IST
Highlights

அரசியல் சாணக்கியதனத்தின் மூலம் இதையெல்லாம் ஈடுகட்டியே தீர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் திருமா. இதைப் புரிந்து கொண்ட ஸ்டாலினும், தொகுதி பங்கீட்டுக்கும் என்னிடம்தானே வரணும் அப்போ வெச்சுக்கிறேன் கச்சேரியை! என்கிறார். 
இது எங்கே போய் நிற்குமோ?!

கருணாநிதியின் அரசியல் கணக்குகள் ஏக சுவாரஸ்யமானவை. எப்போதும் தன் கூட்டணியில் ஓரளவு வளர்ந்த தலித் கட்சி இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனும் அநாயசமாக பயன்படுத்திக் கொண்டார். இதனால்தான் கருணாநிதி காலத்தில் ஆயிரம் முட்டல், மோதல்கள் இருந்தாலும் கூட கருணாநிதியின் கையோடு இணைந்தபடி நின்று வெகுஜன அரசியல் வட்டாரத்தில் கலகலப்பாய் வலம் வந்ததோடு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எனும் பதவிகளை திருமாவின் கட்சியினர் ஆக்கிரமிக்க முடிந்தது. பதிலுக்கு, தி.மு.க.வின் வெற்றிக்கு தங்களின் வாக்கு வங்கியையும் வாரி கொடுத்தனர். 

ஆனால் கருணாநிதி அறிய, ஸ்டாலினுக்கும் - திருமாவுக்கும் இடையில் மிகப்பெரிய உரசல் இருந்து கொண்டேதான் இருந்தது. அது அவரது மறைவுக்குப் பின்னும் இன்னும் தொடரத்தான் செய்கிறது. மத்தியில் ஆளும் பி.ஜே.பி.க்கு எதிராக மிகப்பெரிய மற்றும் வலுவான கூட்டணியை அமைக்கிறது. இதில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் தி.மு.க.தான் தலைமை, அதன் கீழ் காங், வி.சி., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் என்று அணி திரளும் வாய்ப்பு உறுதியாகி உள்ளது. 

தி.மு.க. தலைமையின் கீழ் நிற்பதில் இவர்களுக்கெல்லாம் சந்தோஷம்தான். இருந்தாலும், கருணாநிதியின் தலைமையின் கீழ் இருப்பதை விட ஸ்டாலினின் ஆளுகையின் கீழ் நிற்பதை அசெளகரியமாக கருதுகிறார்கள். ஆனால் அதற்கு ஒன்றும் செய்துவிட முடியாது! இதுதான் இயற்கையின் நியதி, விதி! என்பது அவர்களுக்கு புரிந்திருக்கிறது. ஆனாலும் கூட வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஸ்டாலினுக்கு நிகராகவோ அவரைவிட அதிகமாகவோ தங்களுக்கு அரசியல் வரும் என்பதை காட்டிக் கொண்டு, ஸ்டாலினுக்கு கடுப்பேற்றுகிறார்கள். 

இப்படி செய்வதில் முதல் ஆளாக தி.மு.க.வால் சுட்டிக் காட்டப்படுபவர் திருமாவளவன். மற்ற தலைவர்களை விடவும் ஸ்டாலினோடு கிட்டத்தட்ட நேரடி உரசலில் ஈடுபட்டவர் திருமா. கருணாநிதி இருந்த காலத்திலேயே இவரது தளபதிகளும், ஸ்டாலினின் தளபதிகளும் இணையத்தின் வாயிலாக வெளிப்படையாக கட்டிப்பிடித்து உருண்டு பிறண்டு சண்டையிட்டனர். அதன் பின் சில வழிகளைல் சமாதானமாகினர். சில மேடைகளில் ‘தளபதி ஸ்டாலினை முதல்வராக்குவோம்!’ என்று திருமாவே ஓப்பனாய் முழங்கினார். ஆனாலும் கூட வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஸ்டாலினை விட ஒரு படி முன்னே நின்று அரசியல் செய்வதில்தான் திருமா குறியாக இருக்கிறார்! என்கிறார்கள். 

அதற்கான உதாரணங்களை இப்படி சுட்டுகிறார்கள்...“தமிழகத்தில் தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி, ஸ்டாலின் தான் தலைவர். அதேவேளையில் தேசிய அளவில் காங்கிரஸ்தான் கூட்டணியின் தலைமை கட்சி, ராகுல்தான் தலைவர். இதை காங்கிரஸ்காரர்களை விட திருமாதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். டெல்லி செல்லும்போது ராகுலை சந்திப்பது அல்லது சந்திக்க முயல்வதும், ராகுலை சந்திப்பதற்காகவே டெல்லி செல்வதும் திருமாவின் வழக்கமாகி இருக்கிறது என்கிறார்கள். 

அந்த சந்திப்புகளின் போது தமிழக அரசியல், தேசிய அரசியல் என்று சரமாரியாக அவருடன் ஆலோசித்து தனது ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்கிறார் திருமா. சிம்பிளாக சொல்வதானால் ராகுலின் குட்புக்கில் திருமா அழுத்தமாக பதிந்திருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் தனது கட்சியினர் தாண்டி ஸ்டாலினை புரிந்து வைத்திருப்பது போல் திருமாவுக்கும் பெரிய மரியாதை தருகிறார் ராகுல். இது ஸ்டாலினுக்கு பெரிய எரிச்சலைக் கொடுத்திருக்கிறது.  

இதோடு விட்டாரா திருமா?...விடுதலை சிறுத்தைககள் கட்சியின் சார்பில் டிசம்பர் 10-ல் திருச்சியில் ‘தேசம் காப்போம்’ எனும் மாநாடு நடக்கிறது. பி.ஜே.பி.க்கு எதிரான மாநாடு இது என்றே சொல்லலாம். அந்த வகையில்  அதற்கு அழைப்பதற்காக சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார் திருமா. இது, ஸ்டாலின் - நாயுடு சந்திப்புக்கு முன்பேயே நடந்துவிட்டது. தங்கள் தலைவரை சந்திக்க நாயுடுவே வருகிறார்! என்று சமூக வலைதளங்களில் தி.மு.க.வினர் பெருமை பேசினர். இந்த விஷயத்திலும் நாம் முந்த வேண்டும் என்று திருமாவை உசுப்பிய அவரது கட்சி நிர்வாகிகள், அக்கட தலைமை செயலகத்தில் பேசி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினார்கள். 

 நாயுடுவும் திருமாவை அகம் குளிர சந்தித்தார். அப்போது தேசிய அரசியல் பற்றி நறுக்கென சில விஷயங்களைப் பேசிய திருமா, தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் சில விஷயங்களைக் கூற, அசந்துவிட்டாராம் நாயுடு. இப்படியாக பாபுவிடமும் பசக்கென ஒட்டிக் கொண்டுள்ளார் திருமா. நாயுடுவை தங்கள் தலைவர் சந்தித்ததை மிக பெருமையுடன் இணையத்தில் தம்பட்டம் செய்து வருகிறது வி.சி. டீம். இது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய எரிச்சலை தந்திருக்கிறது. 

ஆக, அரசியலில் ஸ்டாலினை விட எப்போதும் ஒரு படி முன்னே நிற்கவேண்டும்! ஸ்டாலின் போல் தனக்கு பெரிய கட்சி, பெரிய பணம், பெரிய பதவிகள் என இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசியல் சாணக்கியதனத்தின் மூலம் இதையெல்லாம் ஈடுகட்டியே தீர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் திருமா. இதைப் புரிந்து கொண்ட ஸ்டாலினும், தொகுதி பங்கீட்டுக்கும் என்னிடம்தானே வரணும் அப்போ வெச்சுக்கிறேன் கச்சேரியை! என்கிறார். இது எங்கே போய் நிற்குமோ?!

click me!