ஒற்றைத்தலைமை விவகாரம்.. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வந்த சோதனை.. சுயேட்சைகளாக மாறிய ர.ர.க்கள்!

By Asianet TamilFirst Published Jun 29, 2022, 9:04 AM IST
Highlights

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தால், காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேட்சையாகப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஜூலை 11 அன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையாக அக்கட்சியின் பொதுச்செயலாளராக பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது இபிஎஸ் தரப்பு. இந்தப் பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதம் என்று ஓ, பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அதிமுக பொதுக்குழு மீறியதாக ஓபிஎஸ் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும் திட்டமிட்டுள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு கொம்பு சீவி விட்டாச்சு.. இரட்டை இலையை முடக்குவதே பாஜக லட்சியம்.. பொங்கும் நாஞ்சில் சம்பத்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பற்றி எரியும் நிலையில், இதன் தாக்கம் உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கு ஜூலை 9 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்று மாலையோடு முடிந்து போனது. இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வசதியாக படிவம் ஏ மற்று பி-யில் கட்சியின் தலைவர்கள் ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையம் அதை ஏற்று இரட்டை இலை சின்னத்தை அதிமுக வேட்பாளர்களுக்கு வழங்கும். 

இதையும் படிங்க: ஓபிஎஸ்ஸுக்கு நிம்மதிகொடுத்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு.. ஆப்பு வைக்க உச்ச நீதிமன்றத்தை நாடிய இபிஎஸ்!

தற்போது அதிமுகவில் நிலவி வரும் அதிகாரப் போட்டியால் இந்தப் படிவத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் கையெழுத்திடவில்லை. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில், அதிமுக வேட்பாளர்கள் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அதிமுக வேட்பாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக அதிமுக தரப்பில் விசாரித்தபோது, “தற்போதுள்ள சூழலில் படிவம் ஏ மற்றும் பி-யில் கையெழுத்து பெறுவது சாத்தியம் இல்லை. அதனால், அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் இதுதொடர்பாக ஆலோசனை வழங்கி அதிமுகவினரை சுயேட்சையாகப் போட்டியிட வலியுறுத்தி இருக்கிறார்கள். எனவே, இத்தேர்தலில் அதிமுகவினர் சுயேட்சையாகவே போட்டியிடுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
 

இதையும் படிங்க: அதிமுக யார் தலைமையில் இருந்தால் என்ன பிரயோஜனம்..? ஆண்ட கட்சியைக் கதறவிடும் கே. பாலகிருஷ்ணன்.!

click me!