தமிழர் தலைவர் பிரபாகரனுக்கு உதவிய சிங்கப்பட்டி ஜமீன்... அதிரடி ஃப்ளாஷ்பேக்..!

By Thiraviaraj RMFirst Published May 25, 2020, 10:30 AM IST
Highlights

சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு உட்பட்ட பாபநாசம் மலைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த நல்ல இடம் என்று நெடுமாறனுடைய பரிந்துரையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பேபி சுப்ரமணியம் நானும் சென்று இவரை பார்த்த போது, அந்த இடம் பயிற்சிக்கு ஏற்ற இடமாக இல்லை. 
 

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீர்த்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.

தமிழ்நாட்டின் கடைசி ராஜா சிங்கப்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி. தென் இந்தியாவில் எஞ்சியிருக்கும் பட்டம் கட்டிய ஒரே ராஜாவாகக் கருதப்படுபவர்தான் சிங்கப்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி. இவரது முழுப்பெயர் தென்னாட்டு புலி நல்லகுட்டி. சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெய தியாக முத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி. சுருக்கமாக டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவரது தந்தை சங்கர தீர்த்தபதி. ஆங்கிலத்தில் மிகச்சிறந்த புலமை பெற்ற இவர் சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரர். பலே நடனத்தில் புகழ் பெற்றவர்.

ரக்பி விளையாட்டிலும் முத்திரை பதித்தவர். தந்தை இறந்ததை அடுத்து மூன்றரை வயதில் இவருக்கு முடிசூட்டப்பட்டது. அக்கால சம்பிரதாயப்படி முடி சூட்டப்படுபவர் பிரேதத்தைப் பார்க்கக்கூடாதாம். அதனால், தந்தையாரின் பிரேதத்தைக்கூட இவருக்கு காட்டவில்லையாம். முடி சூட்டப்படுபவர்களுக்கு ஆய கலைகள் அறுபத்து நான்கும் கற்பிக்கப்படுவதுண்டு. ஆனால் இவருக்கு அப்படி எந்த பயிற்சியும் அளிக்கப்படவில்லையாம். இருந்தாலும் இவரோ குறி பார்த்து சுடுதல், ரக்பி, போலே நடனம், உதைப்பந்தாட்டம். சிலம்பு, வாள் வீச்சு என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

முடி சூட்டிய ராஜாக்களுக்கு இருக்கும் அபூர்வ சக்தி பற்றி குறிப்பிடும் இவர் நேபாள ராஜாக்கள் கோயிலுக்கு செல்வதில்லையாம். காரணம் அவர்கள் தங்களை விஷ்ணுவின் அவதாரமாக கருதுகிறார்களாம். மழையில்லாத ஊருக்கு அரசர்கள் சென்றால் மழை பெய்யும் என்பது சாஸ்திரம் மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையும் கூட. அதே போல 1984 ஆம் ஆண்டு மழையே காணாத மாஞ்சோலை ஊருக்கு இவரை அழைத்தார்களாம். இவர் அங்கு போனது தான் தாமதம் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. கிராம மக்கள் நன்றிக்கடனாக எனக்கு துலாபார மரியாதை செய்தனர். இவரது ஜமீன் சிங்கப்பட்டி ஜமீன் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு அரசருக்கு சிங்கத்தின் பெருந்தன்மையும் யானையின் வலிமையும் வேண்டும் என்பார்கள். அதன் அடிப்படையிலேயே என் ஜமீனுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கூறும் இவர் சிங்கம் மற்றும் யானையின் தன்மை கொண்டதாகவே இன்னும் தன்னை உணர்வதாக குறிப்பிடுகிறார். 1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்து வந்தது. மேலும், சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், அகமகாதேவர் கோயில், முத்தாரம்மன் கோயில், வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஊத்துக்குளி சாஸ்தா ஆகிய 8 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வருகிறார்.

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளிப்பார். தொடர்ந்து 74 வருடங்களாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் ராஜஉடையில் காட்சி அளித்துள்ளார்.சிங்கம்பட்டி ஜமீன், பிரிட்டிஷ் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கிஸ்தி செலுத்தி வந்துள்ளனர்.இன்று சிங்கம்பட்டி ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிரமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன். தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம். சிங்கம்பட்டி ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. இந்த சிங்கம்பட்டி ஜமீனுக்கு 900 ஆண்டு வரலாறு சொல்லப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தக்காரர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தைத் தோற்றுவித்த ராஜா மார்த்தாண்ட வர்மாவுக்கும், எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நடந்த போரில், சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள் ராஜா பக்கம் நின்று போர் செய்து வெற்றி பெறச் செய்ததனர். அதற்கு நன்றிக் கடனாக, ராஜா மார்த்தாண்ட வர்மன் தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்குக் கொடையாக அளித்தார்.

ஜமீன்சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமையப்பெற்றுள்ளது. சிங்கம்பட்டி ஜமீனில் 1,000 குதிரைகளை வைத்துப் பராமரித்து வந்துள்ளனர். 5 தந்தப் பல்லக்குகள் இருந்தன. ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தற்போது விவசாயம் செய்து வரும் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ஆயுள் காப்பீட்டு முகவராகவும் இருந்தார். 

இவரோடு திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் படித்த காலத்தில் இருந்து அறிமுகம். கடந்த 1972ல் நடந்த மாணவர் போராட்டத்தில், பேரணியை காவல்துறையினர் தாக்கும் போது,  சேலம்லூர்துநாதன், பி.காம் படிக்கும் மாணவர்,  வண்ணாரப்பேட்டை  சுலோசனா முதலியார்  பாலத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். அந்த சம்பவம் நடந்த மாலை அவரை சந்திக்கும் போது அதைக் குறித்து மிகுந்த கவலையோடு அவர் விசாரித்த போது தான் முதல் நெருக்கமான அறிமுகம்.

அதன் பின் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு பகுதிகளுக்கு செல்லும்போது அவர் ஊரில் இருந்தால் அவரை சந்திப்பது வாடிக்கை. கடந்த1983 ஈழப் பிரச்சினை கடுமையாக இருந்தபோது இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான உதவிகளைச் செய்யவும் மத்திய அரசு செயலில் இறங்கியது. இவருடைய சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு உட்பட்ட பாபநாசம் மலைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த நல்ல இடம் என்று நெடுமாறனுடைய பரிந்துரையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பேபி சுப்ரமணியம் நானும் சென்று இவரை பார்த்த போது, அந்த இடம் பயிற்சிக்கு ஏற்ற இடமாக இல்லை. 

அதைப் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அனுப்பியது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் தானிப்பாறை அருவி அருகில் மற்றுமொரு பயிற்சி இடம் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். எங்களிடம் இருந்தது ஒரே வாகனம் தான். எங்களோடு இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் சஅம்பாசமுத்திரத்தில் வந்து சிலர் சேர்ந்தார்கள். அவர்களை அழைத்துச் செல்ல வாகனம் வேண்டும். நாங்கள் ரகசியமாக வாகனம் வாடகைக்கு எடுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டு விட்டு என்ன உங்களுக்கு தயக்கம் என்னுடைய காரை கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக மதுரை வரை செல்லுங்கள் என்று கம்பீரமான குரலில் சொன்னது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.
 

click me!