
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலில் குதித்துள்ளன.
திமுக, அதிமுகவின் 3 அணிகள், பாஜக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 62 பேர் போட்டியிடுகின்றனர். இதனால், ஆர்கே நகரில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.
இதில் அதிமுக ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன், அதிமுக சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
அதேபோல் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள், தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று, வீடு வீடாக வாக்கு சேகரிப்பதாக பணம், பரிசு பொருட்கள் கொடுத்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தேர்தலில் போட்டியிடும் திமுகவினர், பலரை கையும் களவுமாக பிடித்து கொடுத்துள்ளனனர்.
நேற்று தண்டையார்பேட்டை சாஸ்திரி நகர் 3 வது தெருவில் டி.டி.வி.தினகரன் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அங்கிருந்த பெண்கள். அவருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதுபோன்று ஆரத்தி எடுத்த பெண்களுக்கு, அதே பகுதியை சேர்ந்த தினகரனின் ஆதரவாளர் கருணாமூர்த்தி என்பவர் ரூ.1000 கொடுத்தார். அப்போது, அங்கு வந்த திமுகவினர், அவரை கையும் களவுமாக பிடித்து தேர்தல் படையனிரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, ஆர்கே நகர் போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இதனால், தொகுதி முழுவதும் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்துக்கு பதிலாக பணம் கொடுப்பர்களை பிடிப்பதற்காகவே சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஆகே நகர் 40வது வட்டத்தில் இன்று அதிகாலையில் 3 வாலிபர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவரது கையில் ஒரு அட்டை பெட்டி இருந்தது.
இதை பார்த்து சந்தேகமடைந்த திமுகவினர், அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதற்கு அதே பகுதி திருவள்ளுவர் நகரை சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் சிவகுமார், பிரசன்னா, கோபிநாத் ஆகியோர் என்றும், டி.டி.வி.தினகரனுக்கு வாக்கு சேகரிப்பதாகவும் கூறினார்.
உடனே அவரது கையில் இருந்த அட்டை பெட்டியை பிரித்து பார்த்தபோது, அதில் வெள்ளி காமாட்சி அம்மன் விளக்குகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவர்கள் 3 பேரையும், புதுவண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதுபோல் வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கை பரிசாக கொடுத்து, டி.டி.வி.தினகரனுக்கு வாக்களிக்கும்படி கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்த, வெள்ளி விளக்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிவகுமாரை கைது செய்தனர்.