பாஜகவில் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் ….மொத்தமாக தூக்கிய அமித்ஷா !!

By Selvanayagam PFirst Published Aug 13, 2019, 10:43 PM IST
Highlights

சிக்கிம் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக எஸ்.டி.எப். கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.  அமித்ஷாவின் ஆபரேஷன் தாமரை பிளான்படி இந்த 10 பேரும் பாஜகவில் இணைந்துள்ளதால் அக்கட்சி சிக்கிமில் எதிர்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்.) கட்சி, மற்றொரு மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) என்ற கட்சியிடம் தோல்வி அடைந்தது. 

அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் எஸ்.டி.எப். கட்சி 15 தொகுதிகளிலும், எஸ்.கே.எம். கட்சி 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எஸ்.டி.எப். கட்சியின் தலைவர் பவன்குமார் சாம்லிங் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 25 வருடங்கள் மாநில முதலமைச்சராக  இருந்தவர். 

அவரது கட்சியில் 2 பேர் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் அவர்கள் தலா ஒரு தொகுதியை ராஜினாமா செய்தனர். எனவே அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 13 ஆனது. இந்நிலையில் அம்மாநில அரசியலில் திடீர் திருப்பமாக அந்த 13 பேரில் 10 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் பாஜக  பொதுச் செயலாளரும், வடகிழக்கு பிராந்திய பொறுப்பாளருமான ராம் மாதவ் முன்னிலையில் பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். 

இதனால் அந்த மாநிலத்தில் பாஜக  முக்கிய எதிர்க்கட்சியாக மாறுகிறது. இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் அமித்ஷா அறிவுறுத்தலின்படி செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தனர். 

விரைவில் அங்கு 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.டி.எப். கட்சி முன்பு  பாஜக கூட்டணியில் இருந்தது. பின்னர் அந்த இடத்தை எஸ்.கே.எம். கட்சி பிடித்துக்கொண்டது. 

பாஜக  தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் எஸ்.கே.எம். இடம்பெற்றுள்ளது. பாஜகவில்  இணைந்த 10 எம்.எல்.ஏ.க்களும் , பாஜக  வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்துவதால் அக்கட்சியில் இணைந்ததாக தெரிவித்தனர்.

click me!